செய்திகள்
தேவேந்திரபட்நாவிஸ் மற்றும் மோகன்பகவத்

ஆர்.எஸ்.எஸ். தலைவருடன் தேவேந்திர பட்நாவிஸ் அவசர ஆலோசனை

Published On 2019-11-06 10:50 GMT   |   Update On 2019-11-06 11:09 GMT
மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பதில் குழப்பம் நீட்டித்துவரும் நிலையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை தேவேந்திர பட்நாவிஸ் இன்று சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினார்.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 288 இடங்களில் ஆட்சியமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜக 105 இடங்களையும் அதன் கூட்டணி கட்சியான சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றியது. 

இந்த கூட்டணிக்கு பெரும்பான்மை இருந்தபோதிலும் ஆட்சியில் சிவசேனா சமபங்கு கேட்பதால் மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சியமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

இதற்கிடையில், 54 எம்.எல்.ஏ.க்கள் வைத்துள்ள தேசியவாத காங்கிரசையும், 44 எம்.எல்.ஏ.க்கள் வைத்துள்ள காங்கிரசையும் சேர்த்துக் கொண்டு ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சி மேற்கொண்டது. ஆனால் அந்த முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில முதல்மந்திரி தேவேந்திரபட்நாவிஸ் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன்பகவத்தை இன்று சந்தித்தார். 

நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமையகத்தில் சுமார் ஒன்றரைமணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பதில் பாஜக-சிவசேனா கூட்டணி இடையே நிலவி வரும் குழப்பம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. 

மேலும், அயோத்தி வழக்கு தொடர்பான தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் விரைவில் வெளியாக உள்ள நிலையில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட எடுக்கப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.    
Tags:    

Similar News