செய்திகள்
அஜய் சவுதாலா

அரியானா துணை முதல்வராக இன்று பதவி ஏற்பவரின் தந்தை 14 நாள் பரோலில் விடுதலை

Published On 2019-10-27 04:36 GMT   |   Update On 2019-10-27 04:36 GMT
அரியானா துணை முதல்வராக தனது மகன் இன்று பதவி ஏற்பதால் ஊழல் வழக்கில் திகார் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் முதல் மந்திரியின் மகன் பரோலில் வெளியே வந்துள்ளார்.
புதுடெல்லி:

அரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா. இவரது ஆட்சின் போது ஆசிரியர் பணிக்கான சேர்க்கையில் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதனால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிகப்பட்டு டெல்லியில்  திகார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஓம் பிரகாஷ் சவுதாலாவுடன் அவரது மகன் அஜய் சவுதாலாவும் இதே வழக்கில் தண்டிக்கப்பட்டு, திகார் சிறையில் உள்ளார்.

இதற்கிடையில், அரியானா முன்னாள் முதல்வர் மறைந்த தேவிலால் கடைபிடித்த சில கொள்கைகளை முன்வைத்து ஓம் பிரகாஷ் சவுதாலாவின் பேரனும் அஜய் சவுதாலாவின் மகனுமான துஷ்யந்த் சவுதாலா கடந்த ஆண்டில் தனிக்கட்சி ஒன்றை தொடங்கினார்.



ஜனநாயக ஜனதா கட்சி என பெயரிடப்பட்ட அந்த கட்சி தொடங்கி 10 மாதங்களே ஆன நிலையில் அரியானா சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் ஜனநாயக ஜனதா கட்சி வேட்பாளர்கள் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.

90 இடங்களை கொண்ட அரியானா  சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 40 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. காங்கிரஸ் 31 இடங்களை கைப்பற்றி உள்ளது.
 
ஆட்சி அமைப்பதற்கு 46 இடங்கள் தேவை என்ற நிலையில் அந்த எண்ணிக்கையை பாஜகவால் எட்ட இயலவில்லை. தனிப்பெரும் கட்சியாக நீடித்த போதிலும் பாரதிய ஜனதாவால் போதிய இடங்களை பெற இயலாததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை உருவானது.
 
இதனால் 10 தொகுதிகளில் வென்ற ஜனநாயக ஜனதா கட்சியின் துணையுடன் பாஜக அரியானாவில் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.

மனோகர் லால் கத்தார் இன்று முதல் மந்திரியாக பதவியேற்கவுள்ள நிலையில் துணை முதல் மந்திரியாக துஷ்யந்த் சவுதாலா பதவியேற்கிறார்.

இந்நிலையில், தனது மகன் துஷ்யந்த் சவுதாலா அரியானா துணை முதல்வராக இன்று பதவி ஏற்பதால் ஊழல் வழக்கில் திகார் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் அஜய் சவுதாலா இன்று பரோலில் வெளியே வந்துள்ளார்.

சிறை விதிகளின்படி நன்னடத்தை காரணமாக அவர் 14 நாள் விடுவிக்கப்படுவதாக நேற்று திகார் சிறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இன்று காலை விடுதலையான அவர் டெல்லியில் இருந்து அரியானா சென்று மகனின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
Tags:    

Similar News