செய்திகள்
நீதிமன்றம்

கோர்ட்டு அவமதிப்பு வழக்கு- போலீஸ் கமி‌ஷனருக்கு 6 மாதம் ஜெயில்

Published On 2019-09-28 07:05 GMT   |   Update On 2019-09-28 07:05 GMT
கோர்ட்டு அவமதிப்பு தொடர்பான வழக்கில் போலீஸ் கமிஷனருக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை விதித்து தெலுங்கானா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தின் புறநகர் பகுதியில் ரிசார்ட் ஒன்று இயங்கி வருகிறது.

முன்னாள் எம்.எல்.ஏ. ஜகபதிராவின் குடும்பத்துக்கு சொந்தமான இந்த ரிசார்ட்டில் பதிவு செய்த உறுப்பினர்கள் ரம்மி விளையாடி உள்ளனர். அப்போது ரிசார்ட்டில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தியதோடு அங்கு ரம்மி விளையாடுவதற்கு தடை விதித்ததாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து ரிசார்ட்டு நிர்வாகம் தெலுங்கானா ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தது. அதில் ரிசார்ட்டில் ரம்மி விளையாடுவதற்கு சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு ரம்மி விளையாட போலீசார் அனுமதிக்கவில்லை என குற்றம் சாட்டி இருந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரம்மி விளையாட்டில் தலையிட வேண்டாம் என்று போலீசாருக்கு உத்தரவிட்டனர். எனினும் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஐகோர்ட்டு உத்தரவுகளை மீறி போலீசார் பலமுறை ரிசார்ட்டை சோதனை செய்கிறார்கள். குற்றம் சாட்டிய ரிசார்ட் நிர்வாகம் மீண்டும் ஐகோர்ட்டை நாடியது.

இதுதொடர்பாக தாக்கல் செய்த மனுவில், ஐகோர்ட்டு உத்தரவுகளை மீறி போலீசார் பெரும் படையுடன் ரிசார்ட்டுக்குள் நுழைந்து பலரை கைது செய்தனர். இதற்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதி, போலீசாரின் நடவடிக்கை ஏற்கத்தக்கது அல்ல என கூறியதோடு, இதனை கோர்ட்டு அவமதிப்பு வழக்காக கருதி கரீம்நகர் போலீஸ் கமி‌ஷனர் கமலசன்ரெட்டி மற்றும் உதவி கமி‌ஷனர் திருப்பதி, இன்ஸ்பெக்டர் சஷிதர் ரெட்டி ஆகியோரை குற்றவாளிகள் என அறிவித்தார்.

இந்த வழக்கில் கமலசன் ரெட்டி உள்பட 3 பேருக்கும் 6 மாதம் ஜெயில் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் முன் மாதிரியான செலவினங்களுக்காக ரூ.10 ஆயிரத்தை மாநில சட்டப்பணிகள் ஆணையத்தில் டெபாசிட் செய்யவும் உத்தரவிட்டார்.

தண்டனை குறித்த விவரங்களை அதிகாரிகளின் சேவை பதிவுகளில் பதிவு செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News