செய்திகள்
பாபுலால் கவுர்

மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் பாபுலால் கவுர் மரணம்- பிரதமர் இரங்கல்

Published On 2019-08-21 04:42 GMT   |   Update On 2019-08-21 04:42 GMT
மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல் மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான பாபுலால் கவுர் இன்று காலமானார். அவருக்கு வயது 89.
போபால்:

மத்திய பிரதேச மாநில முன்னாள் பாபுலால் கவுர் (வயது 89), முதுமை சார்ந்த உடல்நல பாதிப்புகள் மற்றும் ரத்த அழுத்தம் குறைந்ததால் போபால் நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு ஒருவார காலமாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை பாபுலால் கவுர் மரணம் அடைந்தார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜகவின் முன்னணி தலைவராக விளங்கிய பாபுலால் கவுர், கடந்த 2004ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை முதல் மந்திரியாக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.



அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “பாபுலால் கவுர் பல ஆண்டுகள் மக்களுக்கு சேவை செய்தவர். ஜனசங்கம் கட்சியில் இருந்தபோது, கட்சியை வலுப்படுத்த தொடர்ந்து பணியாற்றியவர். மத்திய பிரதேச மந்திரியாகவும், முதல் மந்திரியாகவும் பணியாற்றி மாநில வளர்ச்சிக்கு பல முயற்சிகளை மேற்கொண்டார். அவரது மறைவு வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News