செய்திகள்
கோப்புப் புகைப்படம்

மக்களுக்கு நன்மை என்றால் யூனியன் பிரதேசமாவதில் பிரச்சனை இல்லை - பிடிபி முன்னாள் தலைவர்

Published On 2019-08-14 17:24 GMT   |   Update On 2019-08-14 17:24 GMT
காஷ்மீர் மக்களுக்கு நன்மை ஏற்படுமானால் யூனியன் பிரதேசமாக்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை என பிடிபி முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர்:

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து யூனியன் பிரதேசமாக பிரித்தது. மேலும், அங்குள்ள முன்னாள் முதல்வர்கள் மொகபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்பட அரசியல் தலைவர்கள் சிலரை வீட்டுக்காவலில் வைத்துள்ளது. 

இந்நிலையில், மக்கள் பயன் அடைவார்கள் என்றால் ஜம்மு-காஷ்மீரை யூனியன் பிரதேசமாக்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை என ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் தலைவர் ஃபரூக் அகமது தர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

1947-ம் ஆண்டு முதல் தற்போது வரை அனைத்து தேவைகளுக்கும் ஜம்மு-காஷ்மீர் வெளி மாநிலத்தை சார்ந்தே இயங்கி வருகிறது. மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா போன்ற முன்னாள் முதல்வர்கள் மக்களை தவறான பாதையிலேயே வழிநடத்தி வந்தனர். அவர்கள் தாங்கள் செய்யும் குற்றங்களை மறைக்க மக்களை பயன்படுத்தியுள்ளனர்.   



பிரிவினைவாத தலைவர்கள் டெல்லியில் தங்களுக்கு சொந்தமாக வீடுகள் வைத்துள்ளனர். ஆனால் இந்தியாவின் இதர பகுதியை சேர்ந்தவர்கள் ஜம்மு-காஷ்மீரில் இடம் வாங்குவதை எதிர்க்கிறார்கள். இது ஒரு கபட நாடகம். 

இங்குள்ள அரசியல் கட்சியினரும் அவர்களது குடும்பத்தினரும் மிகவும் பாதுகாப்பாக உள்ளனர். அவர்கள் பயங்கரவாதத்தை ஒரு தொழிலாக கொண்டுள்ளனர். இதனால் அப்பாவி காஷ்மீர் மக்கள் கொல்லப்படுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News