செய்திகள்

கதுவா சிறுமி கொலை வழக்கு: 6 பேர் குற்றவாளிகள் - பஞ்சாப் நீதிமன்றம் தீர்ப்பு

Published On 2019-06-10 06:40 GMT   |   Update On 2019-06-10 10:40 GMT
காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் 8 சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என பஞ்சாப் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ராசனா என்ற கிராமத்தில் 8 வயது சிறுமி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மாயமானார். பின்னர், ஒரு வாரம் கழித்து அங்குள்ள முட்புதர் ஒன்றில் சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.

எதிர்க்கட்சிகள் கடும் குரல் எழுப்பிய நிலையில், இவ்வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க முதல்வர் மெகபூபா முப்தி உத்தரவிட்டார். திடீர் திருப்பமாக இவ்வழக்கை விசாரணை செய்த போலீஸ் அதிகாரி தீபக் ஹாஜுரியா கடந்த பிப்ரவரி மாதம் அதிரடியாக சிறப்பு புலனாய்வுக்குழுவால் கைது செய்யப்பட்டார்.

18 வயதுக்கு உட்பட்ட சிறுவன் உள்ளிட்ட 7 பேர் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டனர். இதனையடுத்து, சிறுமிக்கு நீதி வேண்டும் என #JusticeForAshifa என்ற ஹேஷ்டேக்கில் பலர் கருத்து பதிவிட்டு வந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு பஞ்சாப்பில் உள்ள பதான்கோட் சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், ஊர் தலைவர் சஞ்சய் ராம், அவரது மகன், மற்றும் போலீஸ் அதிகாரி தீபக் ஹாஜூரியா உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கினர்.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு நபர் சிறுவன் என்பதால், அவன் விடுவிக்கப்பட்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News