செய்திகள்

கோத்ரா கலவரத்தின்போது கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு

Published On 2019-04-24 00:51 GMT   |   Update On 2019-04-24 00:51 GMT
கோத்ரா கலவரத்தின்போது ஒரு கும்பலால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, வேலை, வீடு வழங்க குஜராத் அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. #SupremeCourt #GujaratRiotsVictim #BilkisBano
புதுடெல்லி:

குஜராத் மாநிலம் கோத்ராவில் 2002-ம் ஆண்டு கலவரம் ஏற்பட்டது. அப்போது ஒரு கும்பல் ஒரு பெண்ணின் குடும்பத்தை சேர்ந்த 7 பேரை கொலை செய்துவிட்டு, அந்த பெண்ணையும் கற்பழித்தது. இந்த வழக்கில் தனிக்கோர்ட்டு 2008-ம் ஆண்டு ஜனவரி 21-ந் தேதி தீர்ப்பு வெளியிட்டது.

அதில், 11 பேருக்கு ஆயுள் தண்டனையும், சில போலீசார், டாக்டர்கள் உள்பட 7 பேரை விடுதலை செய்தும் தீர்ப்பு வழங்கப்பட்டது. பின்னர் பாம்பே ஐகோர்ட்டிலும் இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கு நடைபெற்றது.

பாம்பே ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. முன்னதாக இந்த வழக்கில் தவறு இழைத்த ஐ.பி.எஸ். அதிகாரி உள்பட போலீஸ் அதிகாரிகள் மீது 2 வாரத்துக்குள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

மனுதாரர் தரப்பில், குஜராத் மாநில அரசு தனக்கு வழங்குவதாக அறிவித்த ரூ.5 லட்சம் இழப்பீட்டை ஏற்க முடியாது. தனக்கு கூடுதல் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கைவிடப்பட்டது.

இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குஜராத் மாநில அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு, வேலை மற்றும் வீடு வழங்க வேண்டும். குஜராத் மாநில அரசு தவறு இழைத்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்கக்கூடாது. பாம்பே ஐகோர்ட்டால் தண்டனை விதிக்கப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரியை 2 தகுதிகள் பதவி இறக்கம் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.   #SupremeCourt #GujaratRiotsVictim  #BilkisBano
Tags:    

Similar News