செய்திகள்

தெலுங்கானாவில் இப்போது தேர்தல் நடத்தினால் சந்திரசேகர ராவ் கட்சிக்கு 95 இடங்கள் கிடைக்கும் - கருத்து கணிப்பில் தகவல்

Published On 2018-09-18 06:42 GMT   |   Update On 2018-09-18 08:48 GMT
தெலுங்கானாவில் இப்போது தேர்தல் நடத்தினால் சந்திரசேகர ராவ் கட்சிக்கு 95 இடங்கள் கிடைக்கும் என்று புதிய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. #Telangana #Chandrasekharrao

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகரராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியின் ஆட்சி நடந்து வந்தது.

சமீபத்தில் முதல்-மந்திரி சந்திரசேகரராவ் தெலுங்கானா சட்டசபையை முன் கூட்டியே கலைத்தார். எனவே விரையில் அங்கு சட்டசபை தேர்தல் நடத்தும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இந்த நிலையில் தெலுங்கானா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கு வெற்றி கிடைக்கும் என்று ஒரு சர்வே நடத்தப்பட்டது. அதில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிய வந்தது.

தற்போது ஆகஸ்டு 27-ந்தேதி தொடங்கி கடந்த 12-ந்தேதி வரை புதிய கருத்து கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

 


புதிய கருத்துக் கணிப்புப்படி இப்போது தேர்தல் நடத்தப்பட்டால் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 95 இடங்களை சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ் டீரிய சமிதி கட்சி கைப்பற்றும் என்று தெரிய வந்துள்ளது. மொத்த வாக்காளர்களில் சுமார் 48 சதவீதம் பேரின் வாக்குகள் சந்திரசேகரராவ் கட்சிக்கு கிடைக்கும் என்று சர்வேயில் கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு 10 முதல் 20 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. முஸ்லிம் கட்சிக்கு 8 இடங்களும் பா.ஜ.க.வுக்கு 6 இடங்களும் மற்றவர்களுக்கு 3 இடங்களும் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்களுக்கு பிடித்த முதல்-மந்திரி யார்? என்ற கேள்விக்கு பெரும்பாலானவர்கள் சந்திரசேகர ராவை சுட்டிக் காட்டி உள்ளனர். கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 52.58 சதவீதம் பேர் தெலுங்கானாவில் மீண்டும் டி.ஆர்.எஸ். கட்சி ஆட்சியே வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

முதல்-மந்திரியாக சந்திர சேகரராவ் மிக சிறப்பாக செயல்பட்டதாக 67.26 சதவீதம் பேர் திருப்தி தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. #Telangana #Chandrasekharrao

Tags:    

Similar News