செய்திகள்

பீகாரில் இருந்து ராஞ்சி வந்தார் லாலு - நாளை ராஞ்சி நீதிமன்றத்தில் சரண்

Published On 2018-08-29 13:06 GMT   |   Update On 2018-08-29 13:06 GMT
மருத்துவ சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட ஜாமின் நீட்டிப்பு காலம் முடிவடைந்ததால் சிறை தண்டனையை தொடர பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் இன்று ராஞ்சி வந்தடைந்தார். #LaluPrasad #Lalusurrender
ராஞ்சி:

பீகாரில் நடந்த கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று ராஞ்சி நகரில் உள்ள பிர்ஸா முன்டா சிறையில் அடைக்கப்பட்டிருந்த பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவை ஆறுவார காலம் மருத்துவ சிகிச்சைக்காக ஜாமினில் விடுவித்து ராஞ்சி ஐகோர்ட் கடந்த மே மாதம் 11-ம் தேதி உத்தரவிட்டது.

இதைதொடர்ந்து, கடந்த மே மாதம் ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் இருமுறை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த லாலு பிரசாத் யாதவ், மூல நோய் அறுவை சிகிச்சைக்காக மே மாதம் 19-ம் தேதி பாட்னாவில் இருந்து மும்பை புறப்பட்டு சென்றார். 

மும்பை நகருக்கு வந்தடைந்ததும் லாலுவுக்கு குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டதால் மும்பை நகரில் உள்ள ஏசியன் நெஞ்சக நோய் மருத்துவமனையில் உடனடியாக லாலு அனுமதிக்கப்பட்டார். 

அங்கு தீவிர சிகிச்சை பகுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்தனர். உடல்நிலை தேறிய பின்னர் மும்பை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட லாலு கடந்த  8-7-2018 பாட்னாவில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார். அப்போது அவரது ஜாமின் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.

இதற்கிடையில், உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததால் கடந்த 6-ம் தேதி மும்பைக்கு அழைத்து வரப்பட்ட லாலு ஏசியன் நெஞ்சக நோய் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், லாலுவின் ஜாமினை நீட்டிக்குமாறு ராஞ்சி ஐகோர்ட்டில் அவரது வழக்கறிஞர் பிரபாத் குமார் மனு தாக்கல் செய்திருந்தார். 

இதை பரிசீலித்த ஐகோர்ட் நீதிபதி அபரேஷ் குமார், மருத்துவ சிகிச்சைக்காக லாலுவுக்கு முன்னர் அளிக்கப்பட்ட ஜாமினை ஆகஸ்ட்  20-ம் தேதி வரை நீட்டித்து கடந்த பத்தாம் தேதி உத்தரவிட்டார்.  

மேலும் ஒருமுறை நீட்டிப்பு செய்வதற்காக லாலுவின் வழக்கறிஞர் கடந்த 24-ம் தேதி தாக்கல் செய்த மனுவை ஏற்றுகொள்ள மறுத்த நீதிபதி வரும் 30-ம் தேதி அவர் நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். மும்பை மருத்துவமபையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட லாலு கடந்த 25-ம் தேதி பாட்னா திரும்பினார்.

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புறப்பட்ட லாலு, விமானம் மூலம் இன்று மாலை ராஞ்சி நகரை வந்தடைந்தார். நாளை ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் சரணடையும் லாலு பிர்ஸா முன்டா சிறையில் மீண்டும் அடைக்கப்படுவார். #LaluPrasad #Lalusurrender  
Tags:    

Similar News