செய்திகள் (Tamil News)

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் செய்வது பயனற்றது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Published On 2018-07-19 07:46 GMT   |   Update On 2018-07-19 07:46 GMT
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் செய்வது எந்த பலனையும் அளிக்காது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். #RahulGandhi #RTIAct
புதுடெல்லி:

தலைமை தகவல் ஆணையர், இதர ஆணையர், மாநில தகவல் ஆணையர்கள் உள்ளிட்டோரின் ஊதியம் மற்றும் பணி தொடர்பான விதிமுறைகளில் திருத்தம் செய்வது குறித்த முன்மொழிவை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

தகவல் அறியும் உரிமை சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்யும் திட்டம் தொடர்பாக அனைத்து மாநிலங்களவை  எம்.பி.க்களுக்கும் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் செய்வது எந்த பலனையும் அளிக்காது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், ஒவ்வொரு இந்தியரும் உண்மை என்ன என்பதை அறிந்து கொள்ள ஆவலாக இருப்பார்கள். ஆனால், மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக உண்மையை மறைக்கப் பார்க்கிறது.

மக்களிடம் உண்மையை மறைக்க பாஜக முயற்சிக்கிறது. யாரும் தங்களை கேள்வி கேட்கக்கூடாது என ஆட்சியில் இருப்பவர்கள் நினைக்கிறார்கள்.

இப்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை. அதனால் பயனுமில்லை. எனவே, இந்த சட்டத் திருத்தத்தை அனைத்து இந்தியர்களும் சேர்ந்து கண்டிப்பாக எதிர்க்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். #RahulGandhi #RTIAct
Tags:    

Similar News