செய்திகள்

திருப்பதி தேவஸ்தான செயல் இணை அதிகாரியின் சிங்கப்பூர் பயணத்திற்கு அனுமதி மறுப்பு

Published On 2018-07-03 06:00 GMT   |   Update On 2018-07-03 06:00 GMT
நகை மாயம் புகார் காரணமாக திருப்பதி தேவஸ்தான செயல் இணை அதிகாரியின் சிங்கப்பூர் சுற்றுப்பயணம் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருமலை:

திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாச ராஜு தன் சொந்தக் காரணங்களுக்காக சிங்கப்பூர் செல்ல விருப்பதால் ஜூலை 2-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை விடுமுறை அளிக்க வேண்டும் என்று கடந்த மாதம் ஆந்திர அரசுக்கு கடிதம் அனுப்பிருந்தார். அதற்கு ஆந்திர அரசும் அனுமதியளித்தது.

இந்நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வரும் 8 மற்றும் 9-ந் தேதிகளில் சிங்கப்பூரில் நடைபெற உள்ள மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளார். அதனால் தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாச ராஜுவிற்கு அளித்த விடுமுறையை ஆந்திர அரசு ரத்து செய்துள்ளது.

ஏழுமலையானின் ஆபரணங்கள் காணாமல் போய்விட்டதாக முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர் சில மாதங்களாக குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகிறார். சிங்கப்பூரில் புராதன ஆபரணங்கள் மற்றும் பொருட்களை வாங்கும் ஏஜெண்டுகள் உள்ளார்கள் என்றும், அவர்களை சந்திக்கவே சீனிவாச ராஜு அடிக்கடி சிங்கப்பூர் சென்று வருகிறார் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்தக் காரணத்துக்காகவே சீனிவாச ராஜு கடந்த 9 ஆண்டுகளாக தேவஸ்தான செயல் இணை அதிகாரியாக தொடர்ந்து பணிபுரிந்து வருவதாகவும் புகார் வந்தன.

இந்நிலையில், ஆந்திர முதல்வர் சிங்கப்பூருக்கு செல்லும்போது சீனிவாச ராஜுவும் அங்கு சென்றால் தேவையில்லாத சர்ச்சை எழ வாய்ப்புள்ளது. இந்த சூழ்நிலையில், தேவஸ்தான செயல் இணை அதிகாரியின் விடுமுறையை ஆந்திர அரசு ரத்து செய்ததாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News