செய்திகள்

காவிரி வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது- தமிழகம், கர்நாடக அரசின் கோரிக்கைகள்

Published On 2018-05-16 05:58 GMT   |   Update On 2018-05-16 06:02 GMT
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற உள்ள நிலையில் தமிழக அரசு மற்றும் கர்நாடக அரசு முக்கிய கோரிக்கைகளை முன்வைக்க உள்ளது. #CauveryIssue #SupremeCourt
புதுடெல்லி :

தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் இடையே நீண்ட காலமாக காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக பிரச்சினை நீடித்து வருகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கின்  மேல் முறையீட்டை  விசாரித்தது. காவிரியில் தமிழகத்துக்கு கிடைக்கவேண்டிய தண்ணீரின் அளவை 177.25 டி.எம்.சி.யாக குறைத்து தீர்ப்பு வழங்கியது.

காவிரி நதிநீர்  பங்கீடு தொடர்பான வரைவு செயல்திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டது. நீண்ட இழுபறிக்குப் பிறகு வரைவு செயல் திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்தது. அப்போது வரைவு செயல் திட்டம் தொடர்பாக மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்டு தெரிவிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் இன்று காலை 11.30 மணிக்கு வழக்கு காவிரி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ள நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வின் முன்பு தமிழக அரசு 3 முக்கிய கோரிக்கைகளை முன்வைக்க உள்ளது. அவை வருமாறு:-

1. காவிரி தொடர்பான அமைப்புக்கு காவிரி மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க வேண்டும்.

2. இதனை உடனடியாக அரசிதழில் வெளியிட்டு அமல்படுத்த வேண்டும்.

3. காவிரி தொடர்பான அமைப்பின் தலைமையிடத்தை பெங்களூருவில் இருந்து மாற்ற வேண்டும்.

இதேபோல் கர்நாடக அரசும் தங்கள் கருத்தை முன்வைக்க உள்ளது. வரைவு செயல் திட்டத்தில் உள்ள சில அம்சங்களைத் தவிர மற்றதை முழுவதும்  ஏற்றுக்கொள்வதாக கர்நாடக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.  நீர் பயன்பாட்டிற்கு மாநில அரசுகளுக்கு சுதந்திரம் அளிக்க வலியுறுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

குறிப்பாக, தண்ணீர் அளவு மற்றும் பயன்பாடு குறித்து நதிநீர் பங்கீட்டு குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என்ற விதியை மாற்ற வேண்டும் என்று கர்நாடக வலியுறுத்த உள்ளது. #CauverIssue #SupremeCourt  
Tags:    

Similar News