செய்திகள்

ஆந்திர அரசின் இணையதளத்தில் 1½ லட்சம் பேரின் ஆதார்-வங்கி விவரங்கள் கசிவு

Published On 2018-04-26 06:18 GMT   |   Update On 2018-04-26 06:18 GMT
ஆந்திராவில் அரசு சார்பில் ஒதுக்கீடு செய்திருந்த வீடுகளை பெறுவதற்கு அரசின் இணையதளத்தில் பதிவு செய்திருந்த 1½ லட்சம் பேரின் ஆதார், வங்கி விவரங்கள் அனைத்தும் கசிந்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஐதராபாத்:

ஆந்திர மாநில அரசு சார்பில் ஏழைகளுக்கு வீடுகள் ஒதுக்கும் திட்டம் உள்ளது. இதற்காக பலர் அரசின் இணைய தளத்தில் விண்ணப்பித்துள்ளனர்.

அதில் ஆதார் எண், செல்போன் நம்பர், வங்கி விவரங்கள், போன்ற தகவல்களை கொடுத்துள்ளனர். இவை அனைத்தும் ஆந்திர அரசின் மாநில வீட்டுமனை கார்ப்பரே‌ஷன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வீட்டுமனைக்கு விண்ணப்பித்துள்ள 1 லட்சத்து 37 ஆயிரம் பேரின் ஆதார் எண், அவர்கள் விலாசம், செல்போன் நம்பர், மதம், ஜாதி மற்றும் வங்கி கணக்கு எண், எந்த கிளையில் கணக்கு உள்ளது என அனைத்து விவரங்களும் அரசின் இணையதளத்தில் வெளிப்படையாக உள்ளது.

அது யார் வேண்டுமானாலும் பார்க்கும் வகையிலும் பதிவிறக்கம் செய்யும் வகையிலும் உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சமீபத்தில் ஆந்திராவில் இணையதளத்தில் சட்டவிரோதமாக புகுந்து தகவல்களை திருடுவதை தடுக்க சைபர் செக்யூரிட்டி ஆபரேசன் மையத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார். ஆனால் அரசின் இணையதளத்திலேயே தனி நபரின் விவரங்கள் வெளிப்படையாக கசிந்து இருக்கிறது.

இது குறித்து இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் கொடாலி சிஸ்வால் கூறுகையில், நான் அரசின் இணையதளத்துக்குள் அத்துமீறி நுழையவில்லை. அதில் ஏற்கனவே விண்ணப்பித்தவர்களின் தனிப்பட்ட விவரங்களை வெளிப்படையாக பார்க்கவும், பதிவிறக்கம் செய்யும் வகையில் உள்ளது.

இதுபற்றி அவர் மாநில அதிகாரிகள், ஆதார் மையம், தேசிய குற்றத் தடுப்பு, மற்றும் சைபர் மையத்துக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.

இதற்கிடையே இந்த விவகாரத்தை ஆய்வு செய்து அதிகாரிகள் அரசின் இணையதளத்தில் இருந்த தனிநபர் விவரங்களை உடனடியாக அகற்றிவிட்டனர். சுப்ரீம் கோர்ட்டில் நடந்துவரும் ஆதார் வழக்கின் விசாரணையின் போது, தனி நபரின் விவரங்கள் வெளியாகாது என்றும், அவை பாதுகாப்பாக வைக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

ஆனால் மாநில அரசின் இணையதளத்தில் அனைத்து விவரங்களும் வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. #Aadhaar
Tags:    

Similar News