செய்திகள்

கேரளா: ஆர்.எஸ்.எஸ். தொண்டர் கொலை வழக்கில் 3 பேர் கைது

Published On 2017-11-14 07:52 GMT   |   Update On 2017-11-14 07:53 GMT
கேரளா மாநிலம் குருவாயூரில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:

கேரளா மாநிலம் குருவாயூர் நென்மினி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த்(28). ஆர்எஸ்எஸ் தொண்டரான இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த பாசில் என்ற மார்க்சிஸ்ட் தொண்டர் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த வழக்கில் ஆனந்த் 2-வது குற்றவாளியாவார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆனந்த், கடந்த சில  மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார்.



நேற்று முன்தினம் ஆனந்த் தனது நண்பருடன் குருவாயூரில் பைக்கில் சென்று கொண்டிருந்த போது காரில் வந்த மர்மக் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை கண்டித்து குருவாயூர், மணலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று பா.ஜ.க. சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.

கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், கொலையாளிகள் வந்த கார், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர் பாசிலின் சகோதரருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.


இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்நிலையில்,  இவ்வழக்கில் தொடர்புடைய 3 பேரை போலீசார் இன்று கைது செய்தனர். பாசிலின் சகோதரர் பைஸ், கார்த்திக் மற்றும் ஜெய்தீஸ் ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News