செய்திகள்

சட்ட விரோதமாக செயல்பட்ட பட்டாசு தொழிற்சாலையில் விபத்து - 5 பேர் பலி

Published On 2017-08-19 11:10 GMT   |   Update On 2017-08-19 11:10 GMT
ஒடிசாவில் சட்ட விரோதமாக வீட்டில் செயல்பட்ட பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் பெண், குழந்தைகள் உட்பட 5 பேர் பலியாகினர். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
புவனேஷ்வர்:

ஒடிசா மாநிலம் கோர்தா மாவட்டத்தில் உள்ள சிகோ கிராமத்தில் சனாத்தன் சேத்தி என்பவர் வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார்.

இந்நிலையில் இன்று அந்த பட்டாசு தொழிற்சாலையில் திடீரென விபத்து ஏற்பட்டது. அதில் வீட்டிலிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. வீடு இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கியிருந்த உடல்களை மீட்டனர்.

விபத்தில் வீட்டிலிருந்த சனத்தனின் மனைவி பாபி சேத்தி(40), குழந்தைகள் மதாபி சேத்தி(8), டிகிலி சேத்தி(4), டோலி சேத்தி(19), மற்றும் டியூட் சேத்தி(62) ஆகியோர் உயிரிழந்தனர். சனத்தன் தலைமறைவாகியுள்ளார்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News