செய்திகள்

கருப்பு பணம் பற்றி மோடி தெரிவித்த புள்ளி விவரங்களுக்கு ஆதாரம் என்ன?: அருண் ஜெட்லி பதில்

Published On 2017-08-17 03:06 GMT   |   Update On 2017-08-17 03:06 GMT
சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி, டெபாசிட், கருப்பு பணம் தொடர்பான புள்ளி விவரங்களுக்கு ஆதாரம் தர வேண்டிய தேவையில்லை என்று நிதி மந்திரி அருண் ஜெட்லி பதில் அளித்தார்.
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி செங்கோட்டையில் நேற்று முன்தினம் சுதந்திர தின உரை ஆற்றினார். அப்போது அவர், “கடந்த நவம்பர் மாதம் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கணக்கில் காட்டாத ரூ.3 லட்சம் கோடி, வங்கிகளுக்கு வந்துள்ளது. வங்கியில் செலுத்தப்பட்ட பணத்தில் ரூ.1¾ லட்சம் கோடிக்கு மேற்பட்ட டெபாசிட் குறித்து ஆய்வு நடக்கிறது. ரூ.2 லட்சம் கோடிக்கு மேற்பட்ட கருப்பு பணம் வங்கிகளுக்கு வந்துள்ளது” என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில், “ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி இன்னும் முடியவில்லை; அந்த பணி முடிகிறவரையில், செல்லாது என அறிவிக்கப்பட்ட பணம் வங்கிகளில் எவ்வளவு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பதை கூற இயலாது என்று ரிசர்வ் வங்கி வலியுறுத்தி கூறுகிறபோது, பிரதமர் மோடி எப்படி புள்ளி விவரங்கள் தருகிறார்?” என கேள்வி எழுப்பப்பட்டது.

இதுபற்றி, டெல்லியில் நேற்று பேட்டி அளித்த நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு அவர், “பிரதமர் கூறிய புள்ளி விவரங்களுக்கும், ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளை எண்ணுவதற்கும் தொடர்பு இல்லை. இந்த புள்ளி விவரங்கள், நிதி அமைச்சகத்தின் வருவாய் துறை அளித்ததாகும். டெல்லி செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரை ஆற்றிய பிரதமர் மோடி, டெபாசிட், கருப்பு பணம் தொடர்பான புள்ளி விவரங்களுக்கு ஆதாரம் தர வேண்டிய தேவையில்லை” என்று பதில் அளித்தார்.
Tags:    

Similar News