செய்திகள்

குழந்தைகள் மரணம்: உ.பி. மருத்துமனையை பார்வையிட சுகாதாரத்துறை இணை மந்திரியை அனுப்பி வைத்த நட்டா

Published On 2017-08-12 10:40 GMT   |   Update On 2017-08-12 10:40 GMT
உத்தரப்பிரேதசத்தில் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்த மருத்துவமனையில் நேரில் சென்று விசாரணை செய்யுமாறு சுகாதாரத் துறை இணை மந்திரி மற்றும் செயலாளரிடம் மந்திரி ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, மூளையழற்சி நோய்க்காக சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகளில் மூன்று நாட்களில் 35 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர். தொடர்ந்து ஐந்து நாட்களில் 60-க்கும் அதிகமான குழந்தைகள் பலியாகியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சுகாதார மந்திரி தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மரணங்களுக்கு தார்மீக பொறுப்பேற்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மாநில சுகாதார மந்திரி ஆகியோர் பதவி விலக வேண்டுமென காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் மணிஷ் திவாரி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், மத்திய சுகாதார துறை இணை மந்திரி அனுபிரியா படேல் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர் சி.கே. மிஷ்ரா ஆகியோரை சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்யுமாறு மத்திய சுகாதாரத் துறை மந்திரி ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக மாநில சுகாதாரத்துறை அறிக்கை அளிக்கும்படி நட்டா தெரிவித்துள்ளார். வல்லுநர் குழுவும் கோரக்பூர் செல்ல உள்ளது.

கோரக்பூர் நிலவரத்தை பிரதமர் மோடி உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், மத்திய, மாநில அரசு அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும் பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Tags:    

Similar News