செய்திகள்

மேற்கு வங்காளம்: பஷிர்காத் வன்முறையில் காயமடைந்தவர் உயிரிழந்ததால் மீண்டும் பதட்டம்

Published On 2017-07-06 16:31 GMT   |   Update On 2017-07-06 16:31 GMT
மேற்கு வங்காளத்தில் பேஸ்புக் பதிவால் பஷிர்காத் பகுதியில் ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்த ஒருவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அங்கு மீண்டும் பதட்டம் அதிகரித்துள்ளது.
கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு புனித தலத்தைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேஸ்புக்கில் பதிவு செய்த தகவல் வைரலாகப் பரவியதையடுத்து, பஷிர்காத் பகுதியில் மதக்கலவரம் ஏற்பட்டது. இரண்டு மதத்தைச் சேர்ந்தவர்கள் மாறி மாறி தாக்கிக் கொண்டதால் அப்பகுதி போர்க்களமாக மாறியது. இதையடுத்து அருகில் உள்ள பகுதிகளுக்கும் கலவரம் பரவியது.

கலவரக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு, கடைகளை அடித்து நொறுக்கினர். போலீசார் குவிக்கப்பட்டும் நிலைமை கட்டுக்குள் வரவில்லை. கலவரத்தை அடக்க எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த 400 வீரர்கள் வரவழைக்கப்பட்டு, பதற்றம் நிறைந்த பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மத்திய உள்துறை அமைச்சகமும் சம்பவம் தொடர்பாக மாநில அரசிடம் அறிக்கை கோரியுள்ளது.  இதற்கிடையில், அமைதி காக்குமாறு மக்களை முதல் மந்திரி மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டுள்ளார். வதந்திகள் பரவாமல் தடுக்க, இன்டர்நெட் சேவைகளும் நிறுத்தப்பட்டன. 

இதனிடையே, கலவரத்தில் காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கொல்கத்தா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கார்திக் கோஷ்(65) என்பவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கலவரத்தில் காயமடைந்தவர் உயிரிழந்ததை அடுத்து, அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. 

உயிரிழந்த கோஷை பார்க்க வந்த பா.ஜ.க. தலைவர்கள் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களால் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கோஷ் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உறுப்பினர் என்று பா.ஜ.க. தரப்பில் தெரிவித்தனர்.


Tags:    

Similar News