செய்திகள்

காஷ்மீர் பிரிவினைவாத பெண் தலைவர் கைது

Published On 2017-04-27 07:20 GMT   |   Update On 2017-04-27 07:20 GMT
காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் மீது கல்வீச தூண்டுதலாக இருந்த பிரிவினைவாத அமைப்பை சேர்ந்த பெண் தலைவர் ஆசியா அந்திராபியை ஸ்ரீநகர் போலீசார் இன்று கைது செய்தனர்.
ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக மீண்டும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. புல்வாமா மாவட்டம் அருகே சோதனை சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர்.

இதன் தொடர்ச்சியாக போலீசை கண்டித்து பல்வேறு கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கல்லூரிகளுக்கு 5 நாள் விடுமுறை விடப்பட்டது. விடுமுறைக்கு பிறகு கல்லூரி திறக்கப்பட்ட போது ஸ்ரீநகரில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பாதுகாப்பு படையினருக்கும், மாணவர்களுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.

பாதுகாப்பு படையினர் மீது கல்வீசி தாக்கும் பிரிவினைவாதிகளின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தி வன்முறை தாக்குதலை நிகழ்த்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டது.



இதையடுத்து பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப், உள்பட 22 சமூக வலைதளங்களை காஷ்மீர் அரசு அதிரடியாக தடை செய்துள்ளது. 22 சமூக வலை தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஒரு மாதம் அல்லது மறுஉத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என்று அம்மாநில உள்துறை முதன்மை செயலாளர் ஆர்.கே. கோயல் தெரிவித்துள்ளார்.

ஆங்கிலேயர் காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்திய டெலிகிராப் சட்டம் 1885 படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் நலனை கருத்தில் கொண்டு சமூக வலை தளங்கள் முடக்கப்பட்டு உள்ளதாகவும் காஷ்மீர் மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பை சேர்ந்த பெண் தலைவர் ஆசியா அந்திராபியை ஸ்ரீநகர் போலீசார் இன்று கைது செய்தனர்.

பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காலையில் அவரை அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும், பாதுகாப்பு படையினர் மீது பெண்கள் கல்வீசுவதற்கு தூண்டுதலாக இருந்தார் என்று அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Similar News