செய்திகள்

மேற்கு வங்காளத்தில் படகுத்துறை உடைந்து விழுந்தது: 3 பேர் பலி - பலர் மாயம்

Published On 2017-04-26 14:07 GMT   |   Update On 2017-04-26 14:07 GMT
மேற்கு வங்காளத்தில் படகுத்துறை உடைந்து விழுந்ததில் மூன்றுபேர் உயிரிழந்தனர். ஹூக்ளி ஆற்றுக்குள் விழுந்த மேலும் பலரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஹூக்ளி:

மேற்கு வங்காள மாநிலம் ஹூக்ளி மாவட்டம் தெலினிபாராவில் இருந்து ஹூக்ளி நதியைக் கடந்து மறுமுனையில் உள்ள ஷியாம்நகருக்கு செல்வதற்கு படகு போக்குவரத்து உள்ளது. இதற்காக ஆற்றின் இரு புறங்களிலும் மூங்கில் கம்புகளால் படகுத்துறை அமைக்கப்பட்டுள்ளது.

150 அடி உயரம் கொண்ட தெலினிபாரா படகுத்துறையில் இன்று ஏராளமானோர், படகில் செல்வதற்காக காத்திருந்தனர். அப்போது, திடீரென படகுத்துறையின் ஒரு பகுதி உடைந்து ஆற்றுக்குள் விழுந்தது. இதனால் அப்பகுதியில் நின்ற பொதுமக்களும் ஆற்றுக்குள் விழுந்து தண்ணீரில் தத்தளித்தனர்.

உடனடியாக உள்ளூர் பொதுமக்கள் சிறிய படகுகளுடன் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் 18 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் 3 பேர் உயிரிழந்தனர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆற்றில் விழுந்த 40-க்கும் மேற்பட்டோரை தேடும் பணியில் அவசர சேவை பணியாளர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் ஈடுபட்டுள்ளனர். எனவே, பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்தில் உயிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்குவதாகவும் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News