செய்திகள்

ஓடுதளத்தில் விமானத்தின் டயர் வெடித்து விபத்து - 125 பயணிகள் உயிர் பிழைத்தனர்

Published On 2017-04-25 11:16 GMT   |   Update On 2017-04-25 11:16 GMT
கேரளாவில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட விமானம், ஓடுதளத்தில் சென்றபோது டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த 125 பயணிகளும் எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருவனந்தபுரம்:

கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா விமானம் 125 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் காலை 11.30 மணிக்கு புறப்பட்டது. மேலே எழுவதற்காக இந்த விமானம் ஓடுதளத்தில் ஓட தொடங்கியது.

இந்த நிலையில் அந்த விமானத்தின் டயர் ஒன்று பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்தது. டயர் வெடித்ததை அறிந்த விமானி உடனடியாக விமானத்தை நிறுத்தினார். பின்னர் பயணிகள் அவசர அவசரமாக இறக்கப்பட்டனர். விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

விமானத்தில் பயணம் செய்த 125 பயணிகளும் பத்திரமாக விமானத்தில் இருந்து இறக்கப்பட்டனர். சம்பவத்தை தொடர்ந்து கோழிக்கோடு விமான நிலையத்தில் இருந்து மற்ற விமானங்கள் புறப்படுவது தாமதமானது. மாற்று டயர் பொருத்தப்பட்ட பின்னர் ஏர் இந்தியா விமானம் மீண்டும் மாலையில் துபாய் புறப்பட்டு சென்றது.

Similar News