செய்திகள்

கேரளாவில் வேகமாக பரவும் சிக்கன்குனியா - டெங்கு காய்ச்சல்

Published On 2017-04-19 08:29 GMT   |   Update On 2017-04-19 08:30 GMT
கேரள மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் மற்றும் சிக்கன் குனியா பாதிப்பு வேகமாக பரவி உள்ளது. மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் இந்த காய்ச்சல் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இதை தடுப்பதற்காக பல ஆயிரக் கணக்காக கோழிகள், வாத்துகள் அழிக்கப்பட்டன. மேலும் இந்த நோய் பரவாமல் இருக்க தொடர்ந்து நோய் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கேரளாவில் தற்போது டெங்கு காய்ச்சல் மற்றும் சிக்கன் குனியா பாதிப்பு வேகமாக பரவி உள்ளது. மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் இந்த காய்ச்சல் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 117 பேர் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியிலும், சிலர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டனர். அவர்களது ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு டெங்கு, சிக்கன் குனியா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இதை தொடர்ந்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதே போல கண்ணூர், பாலக்காடு மாவட்டங்களிலும் இந்த காய்ச்சலின் தாக்குதல் அதிகமாக உள்ளது. கொசுக்கள் மூலம் இந்த காய்ச்சல் வேகமாக பரவுவதால் பொதுமக்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.

மேலும் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் உடனடியாக ரத்த பரிசோதனை செய்து உரிய சிகிச்சை பெறும்படியும் டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Similar News