செய்திகள்

வன்முறையால் தேர்தல் பாதிப்பு: ஸ்ரீநகர் மக்களவை தொகுதியில் 38 பூத்களில் 13-ம் தேதி மறுவாக்குப்பதிவு

Published On 2017-04-11 13:31 GMT   |   Update On 2017-04-11 13:31 GMT
வன்முறையால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியில் 38 வாக்குப்பதிவு மையங்களில் 13-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மற்றும் அனந்த்நாக் ஆகிய இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, நேற்று முன்தினம் ஸ்ரீநகரில் இடைத்தேர்தல் நடந்தது. ஆனால் இந்த தேர்தலின் போது, போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 7 பேர் பலியாகினர். பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை இருந்ததால், ஸ்ரீநகரில் 7.14 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானது.

ஜம்மு-காஷ்மீர் மாநில தேர்தல் வரலாற்றில், கடந்த 30 ஆண்டுகளில் பதிவான குறைவான வாக்குப்பதிவு இதுதான் என்று தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


எனவே, ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் தொகுதியில் நடக்கவிருந்த இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் இடைத்தேர்தலில் நடந்த வன்முறையை அடுத்து தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அனந்த்நாக் தொகுதியில் பதற்றம் நிலவுவதால், அந்த தொகுதிக்கு மே மாதம் 25-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில், மிகக்குறைந்த வாக்குப்பதிவு நடைபெற்ற ஸ்ரீநகர் தொகுதியில் உள்ள 38 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மிகப்பெரிய அளவில் வன்முறை நடந்தது தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த 38 வாக்குச்சாவடிகளிலும் வரும் ஏப்ரல் 13-ம் தேதி (நாளை மறுநாள்) மறுவாக்குப்பதிவு நடத்தும்படி மாநில தலைமை தேர்தல் அதிகாரிககு தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

Similar News