செய்திகள்

மீண்டும் வன்முறை: ஒடிசாவின் பத்ரக் நகரில் நாளை காலை 7 மணி வரை ஊரடங்கு உத்தரவு

Published On 2017-04-10 11:28 GMT   |   Update On 2017-04-10 11:28 GMT
ஒடிசாவின் பத்ரக் நகரில் மீண்டும் வன்முறை ஏற்பட்டதையடுத்து, நாளை காலை 7 மணி வரை ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது.
பத்ரக்:

ஒடிசா மாநிலம் பத்ரக் மாட்டத்தில், இந்து கடவுள்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறாக கருத்துக்களை சிலர் பதிவேற்றம் செய்துள்ளனர். இதனைக் கண்டித்தும், இந்து கடவுள்களை அவமதித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் கடந்த பத்ரக் நகரில் ஒரு குழுவினர் போராட்டம் நடத்தினர். இதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

எனவே, அமைதி கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது. ஆனால், அதனையும் மீறி வெள்ளிக்கிழமை வன்முறை வெடித்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பலரை கைது செய்தனர். காலவரையற்ற ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இன்று கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை முதல் மதியம் 2 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. ஆனால், மீண்டும் வன்முறை தலைதூக்கியது. 2 கடைகளை வன்முறையாளர்கள் தீயிட்டு கொளுத்தினர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனவே, மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, நாளை காலை 7 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலைமை ஓரளவு சீரடைந்திருப்பதாக கூறிய டிஜிபி கே.பி.சிங், நாளை கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறினார். அதேசமயம், வன்முறை பரவாமல் தடுக்கும் வகையில், பத்ரக் நகரம் முழுவதும் சமூக வலைத்தளங்கள் 48 மணி நேரத்திற்கு முடக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் இந்த தடை நீட்டிக்கப்படலாம் என்றும் டிஜிபி தெரிவித்தார்.

Similar News