செய்திகள்

நியமன எம்.பி.க்கள் தொடர்ந்து ஆப்சென்ட்: மாநிலங்களவையில் சமாஜ்வாடி எம்.பி. கேள்வி

Published On 2017-03-30 08:58 GMT   |   Update On 2017-03-30 08:58 GMT
சச்சின், ரேகா போன்ற நியமன எம்.பி.க்கள் தொடர்ந்து மாநிலங்களவைக்கு வராமல் இருப்பது குறித்து சமாஜ்வாடி கட்சி எம்.பி. கேள்வி எழுப்பியதுடன், அவர்களுக்கு விருப்பம் இல்லை என்றால் ராஜினாமா செய்திருக்க வேண்டாமா? என்று தெரிவித்தார்.
புதுடெல்லி:

கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர், பாலிவுட் நடிகை ரேகா ஆகியோர் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது நியமன எம்.பி.க்களாக நியமிக்கப்பட்டவர்கள். இவர்கள் கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது ஒருநாள் கூட அவைக்கு வரவில்லை. எம்.பி.க்களாக இருந்தும் அவை நடவடிக்கையில் கலந்துகொண்டு, முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

தற்போது பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரத்தை மாநிலங்களவையில் சமாஜ்வாடி உறுப்பினர் நரேஷ் அகர்வால் எழுப்பினார்.



அப்போது பேசிய அவர், ‘இந்த அமர்வில் சச்சின் டெண்டுல்கர், ரேகா உள்ளிட்ட நியமன எம்.பி.க்களை நான் பார்க்கவில்லை. அவர்கள் அவைக்கு வராததால் அவர்களுக்கு ஆர்வம் இல்லை என்றுதான் பொருள். எனவே, அவைக்கு வருவதற்கு ஆர்வம் இல்லை என்றால், பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டாமா?’ என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது குறுக்கிட்ட துணை சபாநாயகர் குரியன், இது அவை உரிமை மீறலின் கீழ் வராது என்றும், நியமன உறுப்பினர்கள் அவையில் சில நாட்கள் இருக்கும் வகையில் அவர்களை அகர்வால் சம்மதிக்க வைக்கலாம் என்றும் கூறினார்.

அவைத்தலைவர் அறிவுறுத்தினால், அந்த உறுப்பினர்களுக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதுவதாக அகர்வால் கூறினார்.

இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூக சேவை போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் 12 பேர் மாநிலங்களவைக்கு நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News