செய்திகள்

ஜனாதிபதிக்கான போட்டியில் நான் இல்லை - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தகவல்

Published On 2017-03-30 00:09 GMT   |   Update On 2017-03-30 00:09 GMT
ஜனாதிபதி தேர்தலில் நான் வேட்பாளராக நிறுத்தப்படுவதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
நாக்பூர்:

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 24-ந் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான பணிகளை மத்திய அரசு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஜனாதிபதிக்கான போட்டியில் பல்வேறு பெயர்கள் அடிபடும் நிலையில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் பெயரும் அந்த பட்டியலில் இருப்பதாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் சமீபத்தில் கூறியிருந்தார்.

ஆனால் ஜனாதிபதி போட்டியில் தான் இல்லை என மோகன் பகவத் மறுத்துள்ளார். நாக்பூரில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இது குறித்து கூறுகையில், ‘வருகிற ஜனாதிபதி தேர்தலில் நான் வேட்பாளராக நிறுத்தப்படுவதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை. ஊடகங்களில் வெளியான இந்த தகவல் வெறும் பொழுதுபோக்கானது’ என்றார்.

அவர் மேலும் கூறும்போது, ‘நாம் எப்போது சங்க பரிவாரங்களில் இணைகிறோமோ, அப்போதே மற்ற சாத்தியங்களுக்கான கதவுகளை நாம் அடைத்து விடுகிறோம். அதன்படி சங்க பரிவாரம் மற்றும் சமூகத்துக்காக மட்டுமே நான் உழைத்து வருகிறேன். ஜனாதிபதி பதவிக்கு எனது பெயர் ஒருபோதும் முன்னிறுத்தப்படாது. அப்படி எனது பெயர் பரிந்துரைக்கப்பட்டாலும், நான் அதை ஏற்கமாட்டேன்’ என்று தெரிவித்தார். 

Similar News