செய்திகள்

10-ம் வகுப்பு கணித தேர்வு வினாத்தாள் தயாரித்த 2 ஆசிரியர்கள் சஸ்பெண்டு

Published On 2017-03-28 04:40 GMT   |   Update On 2017-03-28 04:40 GMT
கேரளாவில் தனியார் பள்ளி மாதிரி கணிதத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் பொதுத்தேர்விலும் கேட்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து வினாத்தாளை தயாரித்த ஆசிரியர்கள் இருவர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
திருவனந்தபுரம்:

கேரளாவில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இதில், கணித தேர்வுக்கு கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி நடத்திய மாதிரி தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் என்று புகார் கிளம்பியது.

கேள்வித்தாள் தயாரித்த ஆசிரியர்கள் அந்த தனியார் பள்ளிக்கு சாதகமாக நடந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து கேரள மாநில கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில், மலப்புரம் தனியார் பள்ளி நடத்திய மாதிரி கணிதத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் பொதுத்தேர்விலும் கேட்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

மேலும் இந்த வினாத்தாளை தயாரித்த ஆசிரியர்கள் கே.ஜி. வாசு, சுஜித்குமார் ஆகியோரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் இருவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். அதோடு விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்தும் விடுவிக்கப்பட்டனர்.

கணிதத்தேர்வில் பிரச்சினை கிளம்பியதையடுத்து மாநிலம் முழுவதும் வருகிற 30-ந்தேதி கணித பாடத்திற்கு மறு தேர்வு நடக்கும் என்று மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதற்கிடையே கடந்த 21-ந்தேதி நடந்த பிளஸ்-1 புவியியல் பாடத்திற்கான கேள்வித்தாளிலும் திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டத்தில் நடந்த மாதிரி தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளே இடம் பெற்றிருந்ததாக புகார் கள் கிளம்பியது.

இந்த கேள்வித்தாளை தயாரித்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆதரவுடன் செயல்படும் கேரள பள்ளி ஆசிரியர் சங்கத்தினர் என்றும் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இதுவும் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News