செய்திகள்
திருமலையில் உள்ள அன்னமயபவனில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.

திருப்பதி கோவிலில் 10 வாரங்களுக்கு வி.ஐ.பி. தரிசனம் ரத்து

Published On 2017-03-28 03:59 GMT   |   Update On 2017-03-28 03:59 GMT
திருப்பதி கோவிலில் ஏப்ரல் 7-ந்தேதி முதல், 10 வாரங்களுக்கு வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி. எல்-2, எல்-3 ஆகிய பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
திருமலை:

திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் திருமலையில் உள்ள அன்னமயபவனில் நடந்தது. கூட்டத்துக்கு அறங்காவலர் குழு தலைவர் சதுலவாடாகிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் சாம்பசிவராவ், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அனந்தலட்சுமி, லலிதகுமாரி, பாலவீராஞ்சநேயா, புட்டா சுதாகர்யாதவ், சாண்ட்ரா வெங்கடவீரய்யா, ஏ.வி.ரமணா, சுசித்ரஎல்லா, டி.பி.ஆனந்தா, ஜி.பானுபிரகாஷ்ரெட்டி, வைத்தியநாதன்கிருஷ்ணமூர்த்தி, பி.ஹரிபிரசாத், சுதாநாராயணமூர்த்தி, நர்சாரெட்டி, ராமச்சந்திராரெட்டி, அறங்காவலர் குழு உறுப்பினரும், அறநிலையத்துறை முதன்மைச் செயலாளருமான ஜெ.எஸ். வி.பிரசாத், தேவஸ்தான இணை அதிகாரிகள் கே.எஸ். சீனிவாசராஜு, போலா.பாஸ்கர், பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை அதிகாரி சீனிவாஸ், நிதித்துறை அதிகாரி பாலாஜி, என்ஜினீயர் சந்திரசேகர்ரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சதுலவாடா கிருஷ்ணமூர்த்தி, தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் சாம்பசிவராவ் ஆகியோர் கூட்டாக தெரிவித்ததாவது:-

கோடை கால விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே ஏப்ரல் 7-ந்தேதி முதல், 10 வாரங்களுக்கு வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி. எல்-2, எல்-3 ஆகிய பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. அத்துடன் சிபாரிசு கடிதங்களும் ரத்து செய்யப்படுகின்றன.

மேலும் வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் வி.ஐ.பி. எல்-2, எல்-3 ஆகிய தரிசனத்தில் பக்தர்களும், சிபாரிசு கடிதங்களும் அனுமதிக்கப்படுகின்றன. வி.ஐ.பி. புரோட்டோக்கால் பக்தர்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்படுகின்றனர். சாதாரண பக்தர்களுக்கு தரிசன ஏற்பாட்டில் முன்னுரிமை வழங்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News