செய்திகள்

கருப்பு பணத்துக்கு எதிரான போரில் அடுத்த கட்டத்துக்கு செல்லவேண்டும்: பிரதமர் மோடி பேச்சு

Published On 2017-03-26 20:46 GMT   |   Update On 2017-03-26 20:46 GMT
கருப்பு பணம், ஊழலுக்கு எதிரான போரில் நாம் அடுத்த கட்டத்துக்கு செல்லவேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி:

கருப்பு பணம், ஊழலுக்கு எதிரான போரில் நாம் அடுத்த கட்டத்துக்கு செல்லவேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மன் கீ பாத்’ (மனதில் இருந்து பேசுகிறேன்) என்ற தலைப்பில் வானொலியில் உரையாற்றி வருகிறார்.

நேற்றைய 30-வது நிகழ்ச்சியில் அவர் பேசும்போது கூறியதாவது:-

கருப்பு பணம், ஊழல் ஆகியவற்றுக்கு எதிரான போரில் நாம் அடுத்த கட்டத்தை நோக்கி செல்லவேண்டும். இதற்காக ரொக்கமில்லா பரிமாற்றம், பணப் பயன்பாட்டின் அளவை குறைத்தல் ஆகியவற்றில் நாம் உறுதியாக இருக்கவேண்டும்.

கல்வி நிறுவனங்களில் கட்டணம் செலுத்துவது, மருந்துகள், கடைகளில் பொருட்களை வாங்குவது, விமான மற்றும் ரெயில் பயண டிக்கெட்டுகள் எடுப்பது போன்ற அன்றாட பயன்பாடுகளை மின்னணு முறையில் மேற்கொள்ளலாம்.

இதன் மூலம் நீங்கள் நாட்டுக்கு மிகப்பெரிய சேவை செய்து கருப்பு பணத்துக்கு எதிராக போராடும் தைரியமான வீரர் என்னும் நிலையை எட்டிடவேண்டும். நாட்டின் 125 கோடி மக்களும், இந்த நிதி ஆண்டு இரண்டரை லட்சம் கோடி அளவு மின்னணு பரிமாற்றங்களை மேற்கொள்வதென பட்ஜெட்டில் இலக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை நிறைவேற்றுவதற்கு இன்னும் ஓராண்டு காலம் இருக்கிறதே என்று மக்கள் கருதி விடக்கூடாது. அதுவரை பொறுத்திருக்காமல் ஆறே மாதங்களில் கூட இதை நிறைவேற்றிட முடியும்.

கடந்த சில மாதங்களாக மின்னணு முறையில் பணம் செலுத்துதல், டிஜிதன் இயக்கம் ஆகியவற்றில் அதிகளவு பரிமாற்றங்கள் நடந்து வருகிறது. இதற்காக நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இது நாட்டில் பணமில்லா பரிமாற்றத்துக்கு வழி வகுக்கும். ஏழையிலும் ஏழைகள் கூட இதை கற்றுக்கொண்டு மின்னணு முறை பணப்பரிமாற்றத்துக்கு வருவார்கள். இதனால் வர்த்தகத்தில் ரொக்கமில்லா பரிமாற்றம் என்னும் நிலைமை நாட்டில் உருவாகும்.

பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்பு மின்னணு முறையில் பணம் செலுத்துவதில் ‘பீம்’ செயலி போன்ற பல்வேறு வழிமுறைகள் கையாளப்பட்டு வருகின்றன. பீம் செயலியை கடந்த இரண்டரை மாதங்களில் ஒரு கோடியே 50 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்து இருக்கின்றனர். எனவே பீம் செயலியை பயன்படுத்துவதில் இன்னும் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு 12 வார கால பிரசவ விடுப்பு அளிக்கப்பட்டு வந்தது. தற்போது அதை மத்திய அரசு 26 வாரங்களாக அதிகரித்து உள்ளது. உலகில் 2, 3 நாடுகளில்தான் பெண்களுக்கு நம்மை விட அதிகமாக பிரசவ விடுப்பு அளிக்கிறார்கள்.

நாட்டின் எதிர்கால குடிமகனுக்கு பிறந்த நாள் முதல் முறையான கவனிப்பு இருக்கவேண்டும், அன்னையின் அன்பு அந்த சிசுவுக்கு முழுமையாக கிடைக்கவேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் குறிக்கோள். இந்த திட்டத்தின் மூலம் சுமார் 18 லட்சம் பெண்கள் பயன்அடைவார்கள்.

தூய்மையான பாரதம் என்ற இயக்கம் தொடங்கப்பட்டதில் இருந்தே அதில் விழிப்புணர்வும் ஏற்பட்டு விட்டது. நாட்டின் புதிய தலைமுறையினர், சிறுவர்கள், மாணவர்கள் ஆகியோரிடம் உருவாகி இருக்கும் இதுபற்றிய உணர்வு நல்லதொரு அறிகுறியை சுட்டிக்காட்டுவதாக அமைந்து இருக்கிறது.

வாரத்தில் ஒரு நாள் பெட்ரோல்-டீசல் ஆகியவற்றை நான் பயன்படுத்த மாட்டேன் என்று நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் உறுதி கொண்டுவிட்டால், மிகப்பெரிய மாற்றம் ஏற்படுவதை நீங்கள் கண்கூடாகவே காண முடியும்.

ஒவ்வொரு குடிமகனும் தங்களது கடமைகளை ஆற்றவேண்டும், பொறுப்புகளை உணர்ந்து செயல்படவேண்டும் என்பதுதான் நான் கூறு விரும்புவது. இதுதான் ஒரு புதிய இந்தியாவின் மங்களகரமான தொடக்கமாக அமையும்.

இவ்வாறு அவர் பேசினார். 

Similar News