செய்திகள்

டி.வி. நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்க சித்து முடிவு

Published On 2017-03-24 06:28 GMT   |   Update On 2017-03-24 06:28 GMT
டி.வி. நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்க சித்து முடிவு செய்துள்ளார். இது சட்டப்படி தவறு அல்ல என்று அட்டர்னி ஜெனரல் கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

பஞ்சாபில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. மந்திரி சபையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துவும் இடம் பெற்றுள்ளார். அவர் கலாச்சாரத்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சித்து ஒரு தனியார் தெலைக்காட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று வருகிறார். அது தொடராக ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே விளையாட்டு சேனலில் வர்ணனையாளராகவும் இருந்தார்.

சித்து மந்திரியாக நியமிக்கப்பட்ட பின்பு அவர் டி.வி. நிகழ்ச்சிகளில் பங்கேற்பது அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சித்து டி.வி நிகழ்ச்சியில் பங்கேற்பதை எதிர்த்து கோர்ட்டில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவர் டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்பதால் மந்திரியாக பணிகளை சரிவர மேற்கொள்ள முடியாமல் போகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இது பற்றி முதல்-மந்திரி அமரிந்தர்சிங் கூறுகையில், சித்து டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும், இல்லையெனில் இலாகா மாற்றம் செய்யப்படுவார் என்றார்.

என்றாலும் சித்து டி.வி. நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்க முடிவு செய்துள்ளார். சித்து கூறும் போது, நான் தனிப்பட்ட முறையில் எனது சொந்த செலவுக்கு பணம் சம்பாதிக்கவே டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன் என்றார்.

இதற்கிடையே சித்து டி.வி.நிகழ்ச்சியில் பங்கேற்பது தவறு இல்லை என்று அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி கருத்து தெரிவித்து உள்ளார்.

இதற்கு முன் எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டில் 1977-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று முதல்- அமைச்சர் ஆனார். அதன் பிறகு அவர் தொடர்ந்து சினிமாவில் நடிக்க முடிவு செய்தார். “அண்ணா நீ என் தெய்வம்” என்ற படத்துக்கு பூஜையும் போடப்பட்டது.

அப்போது அவர் சினிமாவில் நடிப்பது சர்சையை ஏற்படுத்தியதால் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

எம்.ஜி.ஆரைப் பின் பற்றி ஆந்திராவில் என்.டி. ராமராவ் முதல்- மந்திரி ஆனதும் 1989-ம் ஆண்டு பிரம்மரிஷி விஸ்வாமித்ரா’ என்ற படத்தில் விஸ்வாமித்ரராக நடித்து அவரே டைரக்டும் செய்தார்.

முதல்-மந்திரியாக இருப்பவர் சினிமாவில் நடிப்பதை எதிர்த்து ஆந்திர ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி யோகேஸ்வர் தயாள், என்.டி.ராமராவ் சினிமாவில் நடிக்க சட்டப்படி எந்த தடையும் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

என்.டி.ராமராவ் வழக்கில் நீதிபதி வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந்தர்சிங் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.


சித்து டி.வி. நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்க வேண்டாம் என்று மாநில அட்வகேட் ஜெனரல் அதுல் நந்தா யோசனை கூறினார்.

ஆனால் சித்து டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்பதை நியாயப்படுத்தினார். நான் எனது சொந்த தேவைக்கான பணத்தை இதன் மூலம் சம்பாதிப்பதால் ஊழலுக்கு எதிரான முடிவுக்கு பலம் கிடைக்கும் என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “நான் சண்டிகாரில் எனது பணிகளை முடித்து விட்டு பிற்பகல் 3 மணிக்கு விமானத்தில் மும்பை புறப்படுகிறேன். அங்கு மாலை 5 மணிக்கு போய்ச்சேர்ந்ததும் இரவு முழுவதும் டி.வி.படப்பிடிப்பில் பங்கேற்கிறேன். அதிகாலை 3 மணிக்கு மீண்டும் சண்டிகார் புறப்பட்டு அதிகாலை 5 மணிக்கு வந்து விடுவேன். அதன் பிறகு மறுபடியும் காலை 7 மணிக்கு பணிகளை தொடங்குகிறேன். இதனால் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லை, எனது பணியும் பாதிக்கப்படாது” என்றார்.

Similar News