செய்திகள்

தமிழகத்திற்கு வார்தா புயல் நிவாரண நிதியாக ரூ.266.17 கோடி ஒதுக்கியது மத்திய அரசு

Published On 2017-03-23 13:59 GMT   |   Update On 2017-03-23 13:59 GMT
தமிழகத்திற்கு வார்தா புயல் நிவாரண நிதியாக ரூ.266.17 கோடியை மத்திய அரசு ஒதுக்கியிருக்கிறது. ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த உயர்நிலைக் குழு கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
புதுடெல்லி:

வங்கக் கடலில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான ‘வார்தா’ புயல் சென்னை அருகே கரையைக் கடந்தபோது கடும் சூறைக்காற்று வீசியது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்தன. மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் சேதமடைந்ததால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு சார்பில் மீட்பு, நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன், மத்திய அரசு முதற்கட்டமாக 1000 கோடி ரூபாய் வழங்கவேண்டும் என்றும், புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவை அனுப்ப வேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனடிப்படையில் மத்திய உள்துறை இணைச் செயலாளர் தலைமையிலான குழு, தமிழகம் வந்து ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கை அளித்தது.

அதன்பின்னர், பிரதமரை நேரில் சந்தித்த அப்போதைய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வார்தா புயல் நிவாரணம் கோரி மனு வழங்கினார். அதில், ‘புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக ரூ.22,573 கோடி தேவைப்படுகிறது. முதல்கட்டமாக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1,000 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று உயர்நிலைக் குழு கூட்டம் நடந்தது. இதில், புயல் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிவாரண நிதி தொடர்பாக ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி தமிழகத்திற்கு வார்தா புயல் நிவாரணமாக ரூ.266.17 கோடியை ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது. தேசிய பேரிடர் நிதியில் இருந்து இந்த தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, வறட்சி நிவாரணமாக ரூ.1748.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, வறட்சி மற்றும் வார்தா புயல் நிவாரணமாக மொத்தம் ரூ.2014.45 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News