செய்திகள்

மணிப்பூர் மக்கள் உரிமைக்காக மீண்டும் நான் போராடுவேன்: இரோம் சர்மிளா

Published On 2017-03-21 04:29 GMT   |   Update On 2017-03-21 04:29 GMT
மணிப்பூர் மக்கள் உரிமைகளுக்காக தான் மீண்டும் போராட திட்டமிட்டு இருப்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்த பின் இரோம் சர்மிளா கூறினார்.
திருவனந்தபுரம்:

மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர் இரோம் சர்மிளா. இவர் அந்த மாநில மக்களின் உரிமைக்காக 16 ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டவர். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த மணிப்பூர் சட்டசபை தேர்தலில் இரோம் சர்மிளா போட்டியிட்டார்.

மக்களுக்காக 16 ஆண்டுகள் போராடிய அவருக்கு வெறும் 90 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தது. இதனால் மன வேதனை அடைந்த இரோம் சர்மிளா மன அமைதி தேடி கேரள மாநிலம் அட்டப்பாடியில் உள்ள ஆசிரமத்திற்கு வந்து தங்கி உள்ளார்.

இரோம் சர்மிளாவுக்கு கேரளாவின் இயற்கை அழகு மிகவும் பிடித்துப்போய் விட்டது. இதனால் அவர் கோழிக்கோடு பகுதியில் உள்ள கடற்கரைக்கு சென்று கடல் அலைகளில் கால் நனைத்து மகிழ்ந்தார். அவர் முதல்முறையாக அப்போது தான் கடலையே நேரில் பார்த்ததாக கூறினார்.

இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க இரோம் சர்மிளா திட்டமிட்டார். இதற்காக அவர் நேற்று ரெயில் மூலம் கோழிக்கோட்டில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சென்றார். ரெயில்நிலையத்தில் அவரை கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

முதலில் அவர் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்-மந்திரியுமான அச்சுதானந்தனை சந்தித்து பேசினார். பிறகு தலைமை செயலகத்திற்கு சென்று முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார்.


அப்போது அவர் பினராயி விஜயனிடம் கேரளா தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாக பாராட்டுகளை தெரிவித்தார். மேலும் மன அமைதிக்காக தான் கேரளா வந்திருப்பதாகவும் மீண்டும் மணிப்பூர் மக்கள் உரிமைகளுக்காக தான் போராட திட்டமிட்டு இருப்பதால் அவரது ஆதரவு தனக்கு வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

பினராயி விஜயனும் அவரது போராட்டத்திற்கு கம்யூனிஸ்டு கட்சியின் ஆதரவு எப்பொழுதும் உண்டு என்று உறுதி அளித்தார். பினராயி விஜயனை சந்தித்துவிட்டு வெளியில் வந்த இரோம் சர்மிளா தனது போராட்டம் மீண்டும் தொடர உள்ளது பற்றி நிருபர்களிடம் தெரிவித்துவிட்டு ஆசிரமத்திற்கு புறப்பட்டு சென்றார்.

Similar News