செய்திகள்

பொது கணக்கு குழுவின் தலைவராகிறார் மல்லிகார்ஜுன கார்கே

Published On 2017-03-15 16:33 GMT   |   Update On 2017-03-15 16:33 GMT
பொது கணக்கு குழுவின் அடுத்த தலைவராக மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவை நியமிக்கும்படி கட்சி தலைமை பரிந்துரை செய்துள்ளது.
புதுடெல்லி:

மத்திய அரசின் வருவாய் மற்றும் செலவினங்களை தணிக்கை செய்வதற்கு, தேர்வு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பொது கணக்கு குழு அமைக்கப்படுகிறது. பாராளுமன்றத்தால் அமைக்கப்படும் இந்த குழு ஒவ்வொரு ஆண்டும் மாற்றியமைக்கப்படுகிறது.

பொது கணக்கு குழுவின் தலைவர் பதவியானது, பிரதான எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படுகிறது. உறுப்பினர்களைப் பொருத்தவரையில், மக்களவையில் இருந்து 15 பேர், மாநிலங்களவையில் இருந்து 7 பேர் என அதிகபட்சம் 22 பேர் வரை இடம்பெறலாம்.

இந்நிலையில், தற்போதைய பொது கணக்கு குழு தலைவரான கே.வி.தாமசின் பதவிக்காலம் ஏப்ரல் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது. தொடர்ந்து மூன்று முறை தலைவராக இருந்த அவருக்குப் பிறகு, அடுத்த தலைவர் பதவிக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவை காங்கிரஸ் பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக சபாநாயகருக்கு காங்கிரஸ் தலைமை கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Similar News