செய்திகள்

பாராளுமன்றத்தில் ஓ.பி.எஸ். அணி எம்.பி.க்கள் அமளி

Published On 2017-03-10 07:54 GMT   |   Update On 2017-03-10 07:54 GMT
ஜெயலலிதா மரணம் தொடர்பாக மத்திய அரசு விசாரணை நடத்த வலியுறுத்தி பாராளுமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி:

முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு மர்மங்களும், சந்தேகங்களும் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் புகார் கூறி வருகிறார்கள்.

இது தொடர்பாக மத்திய அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஓ.பி.எஸ். அணியினர் தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்.

இந்த நிலையில் இன்று பாராளுமன்றம் கூடியதும் இந்தப் பிரச்சனையை ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் கிளப்பினார்கள். பாராளுமன்றத்தில் இதனால் அமளி ஏற்பட்டது. இதையடுத்து சபை 10 நிமிடம் ஒத்தி வைக்கப்பட்டது.

இதே போல் மேல்-சபையில் இந்தப் பிரச்சனையை ஓ.பி.எஸ். அணி எம்.பி.க்கள் மைத்ரேயன், லட்சுமணன் ஆகியோர் கிளப்பினார்கள். ஜெயலலிதா மரணம் தொடர்பாக முரண்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே இதுபற்றி மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி சபை தலைவர் இருக்கை முன் நின்றவாறு கோ‌ஷம் எழுப்பினார்கள்.

அவர்களுடன் சசிகலா புஷ்பா எம்.பி.யும் சேர்ந்து கொண்டு கோ‌ஷம் எழுப்பினார். அவர்கள் கையில் ஜெயலலிதா படத்தையும், கோரிக்கை அடங்கிய அட்டையும் வைத்து இருந்தனர்.

அப்போது சபையை நடத்திய துணைத் தலைவர் குரியன் ஓ.பி.எஸ். அணியிரை இருக்கையில் போய் அமருமாறு கூறினார். அதை அவர்கள் பொருட்படுத்தாததால் குரியன் எச்சரித்து இருக்கையில் அமருமாறு கூறினார். உள்துறை மந்திரி பதில் அளிக்க வேண்டி இருப்பதால் உங்களுக்கு இதுபற்றி பேச பின்னர் நேரம் அளிக்கிறேன் என்றார்.

இதனால் ஓ.பி.எஸ். அணி எம்.பி.க்கள் சமாதானம் அடைந்து இருக்கையில் அமர்ந்தனர். அதன்பிறகு உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் எழுந்து, உத்தரப்பிரதேசத்தில் ஐ.எஸ். தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டது மற்றும் போபாலில் ரெயில் குண்டு வெடிப்பு பற்றி விளக்கம் அளித்தார்.


அவர் விளக்கம் அளித்து முடிந்ததும் மீண்டும் மைத்ரேயன் பேசுவதற்கு துணைத் தலைவர் குரியன் அனுமதி அளித்தார். இதைத் தொடர்ந்து மைத்ரேயன் பேசுகையில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கைகளில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. எனவே ஜெயலலிதா மரணம் பற்றி மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.

மைத்ரேயன் பேச்சுக்கு அ.தி.மு.க. எம்.பி. விஜிலா சத்யானந்த் எதிர்ப்பு தெரிவித்தார். மைத்ரேயனை பேசவிடாமல் விஜிலா சத்யானந்த் எழுந்து நின்று பேசிக் கொண்டு இருந்தார்.

விஜிலா சத்யானந்த்தை குறுக்கீடு செய்யாமல் அமருமாறு பலமுறை துணைத் தலைவர் கேட்டுக்கொண்ட பிறகும் அவர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். இதனால் கோபம் அடைந்த குரியன் கடுமையாக எச்சரித்ததுடன் அவரது செயலுக்கு கண்டனம் தெரிவித்தார்.

அதன்பிறகு மைத்ரேயன் தனது கோரிக்கையை எடுத்துக் கூறி விட்டு அமர்ந்தார்.

Similar News