செய்திகள்

இந்திய பெண்ணை திருமணம் செய்த பாகிஸ்தான் வாலிபர் வெளியேற உத்தரவு

Published On 2017-03-01 11:56 GMT   |   Update On 2017-03-01 11:56 GMT
மத்திய பிரதேசத்தை சேர்ந்த இளம்பெண்ணை பேஸ்புக் மூலம் காதலித்து திருமணம் செய்த பாகிஸ்தான் வாலிபரை நாட்டை விட்டு வெளியேறும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போபால்:

பாகிஸ்தானில் உள்ள ஐதராபாத்தை சேர்ந்தவர் அக்பர் துரானி (வயது 31). இவருக்கும், மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் இடையே பேக்புக் மூலம் தொடர்பு ஏற்பட்டது.

இருவரும் அடிக்கடி தகவல்களை பரிமாறிக்கொண்டனர். பின்னர் இது காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்காக அக்பர் துரானி முறைப்படி விசா பெற்று இந்தியாவுக்கு வந்தார். மத்திய பிரதேசத்தில் வைத்து அவர்களுக்கு திருமணம் நடந்தது. அதை தொடர்ந்து அவர் அங்கேயே மனைவியுடன் தங்கினார். அவர்களுக்கு குழந்தை பிறந்தது.

ஆனால், இந்தியாவில் தங்குவதற்கான விசா காலம் முடிவடைந்த பிறகும் அவர் தொடர்ந்து இந்தியாவிலேயே இருந்து வந்தார்.

இதையடுத்து அவரை நாட்டை விட்டு வெளியேறும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், மனைவி- குழந்தையை விட்டு பிரிந்து செல்ல முடியாமல் அக்பர் துரானி தவிக்கிறார்.

இதுபற்றி அவர் கூறும் போது, இந்தியாவிலேயே மனைவி- குழந்தையுடன் வசித்து விட வேண்டும் என்று நான் கருதினேன். இப்படி நான் கட்டாயம் வெளியேற வேண்டிய நிலை வரும் என்று ஒருபோதும் நினைத்து பார்க்கவில்லை.

இப்போது எனது வாழ்க்கையில் சுனாமி ஏற்பட்டு இருக்கிறது. நான் என்ன செய்ய போகிறேன் என்று தெரியவில்லை என்றார்.

Similar News