செய்திகள்

பேரிடர் நிவாரண நிதியை விளம்பரங்களுக்கு பயன்படுத்துவதா? - உத்தரகாண்ட் மாநில பா.ஜ.க

Published On 2017-02-27 11:01 GMT   |   Update On 2017-02-27 11:01 GMT
உத்தரகாண்ட் மாநிலத்தில் இயற்கை பேரிடர்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கும் நிவாரண நிதியை, சுற்றுலா விளம்பரங்களுக்காக பயன்படுத்துவதா? என அம்மாநில பா.ஜ.க தலைவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
டோராடூன்:

இயற்கை எழில் சூழ் மாநிலமான உத்தரகாண்ட் சிறந்த ஆன்மீக தலங்களையும் கொண்டுள்ளது. இம்மாநிலத்தின் சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில் முதல்வர் ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசு, கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் இசைக் கலைஞர் கைலாஷ் கெர் ஆகியோரை வைத்து 60 விநாடிகள் ஓடக்கூடிய விளம்பரம் ஒன்றை தயாரித்தது. இவ்விளம்பரத்திற்கு 47.19 லட்சம் ரூபாய் செலவானதாகவும் அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் இயற்கை பேரிடர்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் நிவாரண நிதியிலிருந்து சுற்றுலா விளம்பரம் எடுத்துள்ளதாக அம்மாநில பா.ஜ.க தலைவர் அஜய் பாத் குற்றம் சாட்டியுள்ளார்.



இது சம்பந்தமாக அஜய் பாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பேரிடர்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கும் நிதியை முதல்வர்  தவறாக பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட மக்களை அவமானப்படுத்தியது மட்டுமில்லாமல், விராட் கோலி மற்றும் கைலாஷ் கெர் ஆகியோரையும் அவமானப்படுத்திவிட்டார். இதற்கு முதல்வர், பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த சம்பவத்தை நியாயப்படுத்தியுள்ள முதல்வர் ஹரீஷ் ராவத், “பேரிடர்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைப்பது எவ்வளவு முக்கியமோ, அதே போல் சுற்றுலா துறையை மேம்படுத்துவதும் அவசியம், சுற்றுலா மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு பாதிக்கப்பட்ட இடங்களை சீரமைக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

Similar News