செய்திகள்

பாவனா கடத்தல் வழக்கை மத்திய புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும்: பா.ஜ.க. மாநில நிர்வாகி பேட்டி

Published On 2017-02-27 10:11 GMT   |   Update On 2017-02-27 10:11 GMT
நடிகை பாவனா கடத்தல் வழக்கை மத்திய புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் முரளீதரன் தெரிவித்தார்.
திருவனந்தபுரம்:

பிரபல நடிகை பாவனா கடத்தல் வழக்கில் அவரது கார் டிரைவர் மார்ட்டின், முன்னாள் டிரைவர் சுனில்குமார், விஜேஷ், பிரபல ரவுடி மணிகண்டன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் ஓடும் காரில் பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அதனை செல்போனில் படம் பிடித்ததாகவும் கூறப்பட்டது. அந்த செல்போனை கண்டுபிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

வழக்கின் முக்கிய குற்றவாளியான சுனில்குமார், விஜேஷ் இருவரும் சம்பவம் நடந்த பின்பு சில நாட்கள் கோவையில் மறைந்திருந்தனர். நேற்று அவர்களை கேரள போலீசார் கோவை அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அவர்கள் தங்கியிருந்த வீட்டிலும் சோதனை நடத்தினர். அங்கிருந்து செல்போன் மற்றும் சில மெமரி கார்டுகளை கைப்பற்றினர். அந்த செல்போனில் பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காட்சிகள் பதிவாகி உள்ளனவா? என்பது பற்றி போலீசார் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே சுனில்குமார், விஜேஷ் கைது செய்யப்பட்டதும், இந்த பிரச்சினை முடிவுக்கு வந்ததாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார். இதற்கு பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பாவனா, வழக்கில் கைதானவர்களிடம் விசாரணை முடியும் முன்பே உள்துறை இலாகா பொறுப்பையும் சேர்த்து வகிக்கும் முதல்-மந்திரி இத்தகைய கருத்தை வெளியிட்டது ஏன்? என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.

கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதீரன் மற்றும் ரமேஷ் சென்னிதலா ஆகியோர் கூறும்போது, பாவனா கடத்தல் வழக்கில் கூட்டு சதி நடந்துள்ளது. இதன் பின்னணியில் இருந்தவர்கள் யார்? என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதற்கு போலீசாரை சுயமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். ஆனால் முதல்-மந்திரி விசாரணையில் இருக்கும் வழக்குப் பற்றி கருத்து சொன்னதை ஏற்க முடியாது என்றனர்.

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் முரளீதரன் கூறியதாவது:-

பாவனாவையும், அவரது குடும்பத்தினரையும் சந்தித்தேன். அவர்கள் பீதியில் உள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் கூட்டு சதி நடந்திருக்கிறது. இதனை வெளிக்கொண்டு வரவேண்டும். அதற்கு மத்திய புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்த வேணடும். அப்போதுதான் உண்மை வெளிவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே முதல்-மந்திரி பினராயி விஜயன் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். தான் கூறியதை ஊடகங்கள் திரித்து வெளியிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பாவனா கடத்தல் வழக்கில் போலீசார் சுதந்திரமாக செயல்படுகிறார்கள். எனவேதான் அவர்கள் குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்துள்ளனர் என்றார்.

Similar News