செய்திகள்

கோவா கடற்கரை திருமணங்களை தடை செய்ய பரிந்துரை

Published On 2017-02-23 12:12 GMT   |   Update On 2017-02-23 12:12 GMT
கோவா கடற்கரையில் நடைபெறும் திருமணங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என சுற்றுச்சூழல் அமைப்பொன்று மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பியுள்ளது.
பனாஜி:

கோவா கடற்கரைகளில் நடைபெறும் திருமணங்கள் பிரபலமடைவதுடன் வெற்றியையும் பெறுகின்றன. இதனால் இங்கு திருமணம் செய்யும் வெளிநாட்டவர்கள் அலங்காரம், உணவு வகைகள், இசை ஆகியவற்றுக்கு எக்கச்சக்கமான பணத்தை செலவு செய்கின்றனர். இதனால் கடந்த சில வருடங்களாக கோவாவில் நடைபெறும் கடற்கரை திருமணங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு வருடத்தில் சுமார் 800-க்கும் அதிகமான ஆடம்பர திருமணங்கள் இங்கு நடைபெறுகின்றன.   

ஷாமியானாவுடன் கூடிய பந்தல், உணவு ஸ்டால்கள், இசை மற்றும் அலங்காரம் ஆகியவற்றுடன் நடைபெறும் திருமண விழாக்கள் சில சமயம் 7 நாட்கள் வரை நடைபெறுகின்றன.



இந்நிலையில், கோவா கடற்கரை பகுதிகளில் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மிக்க இடங்களில் திருமணங்களை தடை செய்ய வேண்டும் என அரசு உதவி பெறும் சுற்றுச்சூழல் அமைப்பான கடலோர மேலாண்மை தேசிய மையம் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. கோவா கடற்கரை பகுதிகளில் நடைபெறும் ஆடம்பர திருமணங்கள் தொடர்பான பல்வேறு பரிந்துரைகள் கொண்ட இந்த அறிக்கை விரைவில் பொதுவெளியில் வைக்கப்பட உள்ளது.

கடற்கரை திருமணங்களில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், அவர்களுக்கு அனுமதி மறுக்க வேண்டும் அல்லது வழங்கப்பட்ட அனுமதியை திரும்ப பெற வேண்டும் என கோவா கடலோர பிராந்திய மண்டல மேலாண்மை ஆணையம் மற்றும் சுற்றுலா துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News