செய்திகள்

சாப்ட்வேர் துறையில் 65 சதவீத என்ஜினீயர்கள் வேலை இழக்கும் அபாயம்

Published On 2017-02-20 05:56 GMT   |   Update On 2017-02-20 05:56 GMT
புதிய தொழில்நுட்ப வரவால் இந்திய என்ஜினீயர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என்று இப்போது புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
புதுடெல்லி:

இந்திய கம்ப்யூட்டர் சாப்ட்வேர் துறை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை நம்பியே இருக்கிறது. இந்திய என்ஜினீயர்கள் பெரும்பாலோர் அமெரிக்க நிறுவனங்களுக்காக நேரடியாகவோ அல்லது அவுட்சோர்சிங் முறையிலோ பணியாற்றி வருகிறார்கள்.

ஆனால் அமெரிக்க புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பணிகள் வெளிநாட்டினருக்கு செல்வதை விரும்பாமல் அதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

இதனால் இந்திய சாப்ட்வேர் என்ஜினீயர்கள் பெரும்பாலானோர் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் 80 சதவீத என்ஜினீயர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் புதிய தொழில்நுட்ப வரவால் இந்திய என்ஜினீயர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என்று இப்போது புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

இந்திய கம்ப்யூட்டர் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு (நாஸ்காம்) நடத்திய தலைமை பண்பு கருத்தரங்கம் நடந்தது. இதில் பிரபல பிரெஞ்சு கம்ப்யூட்டர் நிறுவனமான கேப்கேமினி நிறுவனத்தின் இந்திய தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீனிவாஸ் காண்டுலா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தகவல் தொழில்நுட்ப துறையில் புதிய தொழில்நுட்பங்கள் வேகமாக ஊடுருவி வருகின்றன. குறிப்பாக டிஜிட்டல் துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதற்கு தகுந்த மாதிரி பணியாற்றுவதற்கு இந்திய என்ஜினீயர்களுக்கு போதிய திறன் பயிற்சி இல்லை.

இந்தியாவில் சாப்ட்வேர் துறையில் 39 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் குறிப்பிட்ட சிலர் மட்டும் தான் இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தகுந்தமாதிரி பயிற்சி பெற்று வருகிறார்கள். பெரும்பாலானோருக்கு இதுபற்றிய விவரங்கள் எதுவும் போதவில்லை.

பல கல்லூரிகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு அடிப்படை தொழில்நுட்ப அறிவு கூட இல்லை. அந்த கல்லூரிகள் மிக தரம் தாழ்ந்த அளவில் இருப்பதால் மாணவர்களை உரிய முறையில் தயார்படுத்தவில்லை. அதுபோன்ற நபர்களை இந்த பணிகளுக்கு பயன்படுத்த முடியாது. பல மாணவர்களிடம் தாங்கள் எழுதிய கடைசி செமஸ்டர் தேர்வு பற்றி கேள்வி கேட்டால் கூட பதில் சொல்ல தெரியவில்லை. இப்படிப்பட்டவர்களால் எந்த பயனும் இருக்காது. இனி அவர்களுக்கு பயிற்சி அளித்து இதுபோன்ற பணிகளில் ஈடுபடுத்தவும் முடியாது.

ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கும் இந்த தொழில்நுட்ப திறன் இல்லை. எனவே இதன் காரணமாக 65 சதவீத நடுநிலை மற்றும் சீனியர் அளவிலான என்ஜினீயர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படும். இதை தடுக்க வேண்டும் என்றால் மாணவர்கள் இன்றைய சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி அனைத்து திறனும் பெற்றவர்களாக வெளிவர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News