செய்திகள்

தமிழக அரசியல் விவகாரத்தில் மத்திய அரசு தலையிடாது: கிரண் ரிஜிஜு

Published On 2017-02-13 10:43 GMT   |   Update On 2017-02-13 10:43 GMT
தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், மத்திய அரசு தலையிடாது என்றும், அது மாநிலத்தின் உள்விவகாரம் என்றும் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
புதுடெல்லி:

தமிழகத்தில் ஆட்சியமைப்பது தொடர்பாக சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கிய சசிகலா, ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கும்படி கூறியிருக்கிறார். சசிகலாவுக்கு எதிராக களமிறங்கியுள்ள முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளார். ஆனால் ஆளுநர் இந்த விஷயத்தில் எந்த முடிவும் எடுக்காமல் மவுனமாக உள்ளார். இதனால் ஆளுநர் மீது விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இந்நிலையில், மத்திய உள்துறை இணை மந்திரி கிரண் ரிஜிஜு புதுடெல்லியில் இன்று நிருபர்களிடம் பேசும்போது தமிழக விவகாரம் குறித்து கூறியதாவது:-

தமிழகத்தில் நிலவும் அரசியல் நிலவரமானது அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரம். அதில் மத்திய அரசு தலையிடும் என்ற கேள்விக்கே இடமில்லை. அதற்கு எங்களுக்கு உரிமை இல்லை. அரசியலமைப்பின் அடிப்படையில் தலையிடக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். இது அரசியல் விவகாரம் மற்றும் அரசியல் சூழ்நிலை ஆகும். மத்திய அரசு தலையிட முடியாது.

இது மாநில விவகாரங்களின் கீழ் வருகிறது. இதில் மத்திய அரசு ஏன் தலையிட வேண்டும்? அதற்கு எந்த காரணமும் இல்லை. இது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் உள்ள குழுவினரிடையே நிலவும் பிரச்சனை.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News