செய்திகள்

கர்நாடகத்தில் போராட்டம் வலுப்பதால் எருமை பந்தயம் நடத்த சட்டசபையில் மசோதா: மந்திரிசபை கூட்டத்தில் முடிவு

Published On 2017-01-29 05:03 GMT   |   Update On 2017-01-29 07:34 GMT
கம்பளா போட்டி நடத்துவதற்காக அவசர சட்டம் பிறப்பிப்பது குறித்தும் மந்திரிகளுடன் முதல்-மந்திரி சித்தராமையா ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அவசர சட்டம் கொண்டு வருவது என்று முடிவு செய்யப்பட்டது.

பெங்களூரு:

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய போராட்டம் வரலாற்று சிறப்புமிக்கதாக அமைந்தது. இந்த போராட்டம் காரணமாக தமிழக அரசு அவசர சட்டத்தை இயற்றி ஜல்லிக்கட்டை அனுமதித்தது.

ஜல்லிக்கட்டு போராட்டமும், அதன் ஒழுங்கு மற்றும் வெற்றி நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இதேபோன்று கர்நாடகா மாநிலத்திலும் கம்பாலா போட்டிகளை (எருமை பந்தயம்) நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பெரிதாக வெடித்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு வெடித்ததை போன்ற புரட்சி கர்நாடகாவிலும் வலுப்பெற்றுள்ளது.

பாரம்பரியமிக்க கம்பாலா போட்டியை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களிலும், பெங்களூருவிலும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த போராட்டத்தில் மாணவ, மாணவிகளும் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் எதிர்க்கட்சி தலைவர்களும், கன்னட அமைப்புகளும் கம்பாலா போட்டியை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் முதல்- மந்திரி சித்தராமையா தலைமையில் கர்நாடக மந்திரி சபை கூட்டம் மாலையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் கர்நாடகத்தில் கம்பளா போட்டிக்கு ஆதரவாக நடந்து வரும் போராட்டங்கள் பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கம்பளா போட்டி நடத்துவதற்காக அவசர சட்டம் பிறப்பிப்பது குறித்தும் மந்திரிகளுடன் முதல்-மந்திரி சித்தராமையா ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் கம்பாலா போட்டியை நடத்த அவசர சட்டம் கொண்டு வருவது என்று முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து சட்டத்துறை மந்திரி ஜெயச்சந்திரா நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்களில் கம்பாலா போட்டி பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த போட்டிக்கு கர்நாடக ஐகோர்ட்டு தடை விதித்து உள்ளது.

கம்பாலா போட்டிக்கு அரசின் ஆதரவு எப்போதும் உண்டு என்று முதல்-மந்திரி சித்தராமையா ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

அதன் படி, கம்பாலா போட்டியை நடத்துவதற்கு ஏதுவாக கர்நாடகத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும்.

அந்த சட்ட திருத்தம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 6-ந் தேதி தொடங்க உள்ள சட்டசபை கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். இதன்மூலம் எந்த தடையும் இன்றி கம்பாலா போட்டி நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் இந்த சட்ட திருத்தம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

Similar News