செய்திகள்

ஆந்திரா ரெயில் விபத்து பலி 39 ஆக உயர்வு: ரெயில்வே மந்திரி நேரில் சென்று ஆய்வு

Published On 2017-01-22 13:23 GMT   |   Update On 2017-01-22 13:23 GMT
ஆந்திரா மாநிலத்தில் ஜக்தல்பூர்-புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 39-ஆக உயர்வு. விபத்து நடந்த இடத்தில் ரெயில்வே மந்திரி பார்வையிட்டார்.
புதுடெல்லி:

ஒடிசா மாநில தலைநகரான புவனேஸ்வர் - சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜக்தல்பூர் இடையே செல்லும் ஜக்தல்பூர்-புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று பின்னிரவு 11 மணியளவில் ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயநகரம் மாவட்டத்தின் குனேரு ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை விட்டு விலகிச் சென்று பக்கவாட்டில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 100 பேர் காயமடைந்ததாகவும் நேற்று பின்னிரவில் செய்திகள் வெளியானது. இன்று பிற்பகல் நிலவரப்படி சிகிச்சை பலனின்றி சிலர் பலியானதால் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ள நிலையில், மேலும் 7 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. 

விபத்து நடந்த இடத்தை மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு மற்றும் ரெயில்வே வாரியத் தலைவர் ஏ.கே. மிட்டல் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். விபத்துக்கான காரணம் குறித்தும் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

பலியானவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என ரெயில்வே துறை அறிவித்திருந்த நிலையில், பலியானவர்களில் ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கு மாநில அரசு சார்பாக மேலும் 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என ஆந்திர மாநில முதல்மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

Similar News