செய்திகள்

பாகிஸ்தானிடம் பிடிபட்ட இந்திய ராணுவ வீரர் இன்று ஒப்படைக்கப்பட்டார்

Published On 2017-01-21 10:43 GMT   |   Update On 2017-01-21 10:43 GMT
எல்லைப்பகுதியில் வாலாட்டி வந்த பாகிஸ்தான் மண்ணுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய பின்னர் பிடிபட்ட இந்திய வீரரை பாகிஸ்தான் ராணுவம் இன்று ஒப்படைத்தது.
புதுடெல்லி:

எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் படையினர் அடிக்கடி போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நடத்திவரும் துப்பாக்கிச் சூடு, மற்றும் பாகிஸ்தான் உளவுத்துறையினரின் ஒத்துழைப்புடன் இந்திய மண்ணில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திவரும் தற்கொலைப்படை தாக்குதல்களால் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான நட்புறவில் சமீபகாலமாக விரிசல் அதிகரித்தது.

இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் உரி பகுதியில் உள்ள ராணுவ தலைமையகத்தினுள் புகுந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் குண்டுகளை வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் இந்திய ராணுவ வீரர்கள் 18 பேரை கொன்று குவித்தனர்.

மத்திய அரசால் ரண அறுவை சிகிச்சை (சர்ஜிக்கல் அட்டாக்) என்று குறிப்பிடப்பட்ட இந்த தாக்குலுக்கு பின்னர், இந்திய வீரரான சந்து பாபுலால் சவுஹான் என்பவர் தவறுதலாக எல்லைப்பகுதியை கடந்து, பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் சிக்கிக் கொண்டார்.

அவரை விடுவிப்பது தொடர்பாக இருநாட்டு ராணுவ உயரதிகாரிகள் பங்கேற்ற கொடிநாள் கூட்டங்களின்போது விவாதிக்கப்பட்டது. இதன் பலனாக, கடந்த 4 மாதங்களாக பாகிஸ்தான் ராணுவத்திடம் கைதியாக சிறைபட்டிருந்த சந்து பாபுலால் சவுஹான் இன்று விடுதலை செய்யப்பட்டார்.



இன்று பிற்பகல் 2.30 மணியளவில் வாகாவில் உள்ள இருநாட்டு எல்லைப்பகுதியில் இந்திய ராணுவ உயரதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Similar News