செய்திகள்
பெங்களூரு டவுன் ஹால் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பெங்களூருவிலும் போராட்டம்

Published On 2017-01-20 08:21 GMT   |   Update On 2017-01-20 08:21 GMT
ஜல்லிகட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும், தமிழர்களின் பாரம்பரியம், கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று பெங்களூருவில் ஆயிரக்கணக்கில் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
பெங்களூரு:

ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்ற கோரியும், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க கோரியும் தமிழகத்தில் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சென்னை, சேலம், மதுரை உள்பட அனைத்து நகரங்களிலும் நடந்துவரும் தொடர் போராட்டம் தீவிரமாக வலுத்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் இந்த போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் மாணவர்கள் தங்களின் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவது இல்லை என்று அவர்கள் அறிவித்து உள்ளனர். இதற்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்களும் ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அண்டை மாநிலமான கர்நாடகத்தின் தலைநகர் பெங்களூரு டவுன் ஹால் முன்பு நேற்று கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவர்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி இருந்தனர். மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் கோ‌ஷங்களை எழுப்பினர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உடனடியாக அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறியதாவது:

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு என்பது ஒரு பாரம்பரியமான விளையாட்டு. பொங்கல் பண்டிகையின்போது இந்த ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடத்தப்படுகிறது. இது தமிழர்களின் கலாசாரத்துடன் பின்னி பிணைந்துள்ளது. காளைகள் தமிழர்களின் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக விளங்குகிறது. இத்தகைய சூழ்நிலையில் வெளிநாட்டை சேர்ந்த பீட்டா அமைப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, இதற்கு தடை பெற்றுள்ளது.

இது தமிழர்களின் பண்பாட்டை நசுக்கும் செயல் ஆகும். இதை நாங்கள் ஏற்க மாட்டோம். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரி தமிழகத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிக தீவிரமாக போராடி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் இங்கு போராட்டத்தை நடத்துகிறோம். மத்திய அரசு உடனடியாக அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிகட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும். இதன் மூலம் தமிழர்களின் பாரம்பரியம், கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

போராட்டத்தில் ஆயிரக்கணக்கில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி டவுன் ஹால் முன்பு அதிக எண்ணிக்கையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Similar News