செய்திகள்

இந்திய தேசியக் கொடி அவமதிப்பு: அமேசான் மன்னிப்பு கோரியது

Published On 2017-01-12 15:27 GMT   |   Update On 2017-01-12 15:27 GMT
சுஷ்மா எச்சரிக்கையை அடுத்து இந்திய தேசியக் கொடி அவமதிப்பு செய்யப்பட்ட விவகாரத்தில் அமேசான் நிறுவனம் மன்னிப்பு கோரியது.
புதுடெல்லி:

அமேசான் நிறுவனத்தின் கனடா பிரிவு இணையதளத்தில் இந்திய தேசியக் கொடி போன்ற கால் மிதியடி விற்பனைக்கு வைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தேசியக் கொடியை அவமதிக்கும் விதமாக இருப்பதாக அமேசானுக்கு எதிராக விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்தது.

இவ்விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், “இச்சம்பவத்திற்கு அமேசான் நிறுவனம் மன்னிப்பு கேட்கவேண்டும், அல்லது நாங்கள் அமேசான் அதிகாரிகளுக்கான இந்தியா விசாக்களை ரத்து செய்வோம்,” என எச்சரித்தார்.

“அமேசான் முதலில் நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்கவேண்டும். அமேசான் நிறுவனம் எங்களது தேசியக் கொடியை அவமதிக்கும் வகையிலான அனைத்து பொருட்களை இணையதளத்தில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். இது உடனடியாக செய்யப்படவில்லை என்றால் நாங்கள் அமேசான் அதிகாரிகளுக்கு இந்திய விசா வழங்க மாட்டோம். முன்னதாக வழங்கப்பட்ட விசாக்களையும் ரத்து செய்வோம்,” என்று எச்சரித்தார் சுஷ்மா சுவராஜ்.

அமேசானில் இந்திய தேசியக் கொடி மட்டுமின்றி இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவின் தேசிய கொடிகளும் கால்மிதியடிகள் போல விற்பனைக்கு வைக்கப்பட்டது கடும் கொந்தளிப்பை உண்டாக்கியது.

 அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் உள்பட பல்வேறு தரப்பில் இருந்து கடும் விமர்சனம், கண்டனம் காரணமாக அமேசான் நிறுவனம் தேசியக் கொடி போன்ற கால் மிதியடிகள் அனைத்தையும் தனது இணையதளத்தில் இருந்து நீக்கியது.

சுஷ்மா எச்சரிக்கையை அடுத்து இந்திய தேசியக் கொடி அவமதிப்பு செய்யப்பட்ட விவகாரத்தில் அமேசான் நிறுவனம் மன்னிப்பு கோரியது.

இந்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மாவிற்கு அமேசான் எழுதிஉள்ள கடிதத்தில் இந்தியர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் விளம்பரம் வெளியிட்டதற்கு மன்னிப்பு கோருவதாக கூறி உள்ளது.

Similar News