செய்திகள்

டாடா சன்ஸ் குழுமத் தலைவராக தமிழகத்தை சேர்ந்த என்.சந்திரசேகரன் நியமனம்

Published On 2017-01-12 14:40 GMT   |   Update On 2017-01-12 14:40 GMT
டாடா சன்ஸ் நிறுவனங்களின் குழுமத் தலைவராக தமிழகத்தை சேர்ந்த என்.சந்திரசேகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனம் டாடா. இந்த குழுமத்திற்கு உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் பலவிதமான தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக கடந்த 1991-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை ரத்தன் டாடா பொறுப்பு வகித்தார். அதன்பின்னர் தலைவர் பொறுப்பிலிருந்து அவர் விலகிக் கொள்ள, சைரஸ் மிஸ்திரி புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக தலைமை பொறுப்பு வகித்து வந்த சைரஸ் மிஸ்திரி, கடந்த அக்டோபர் 24-ம்தேதி அதிரடியாக நீக்கப்பட்டார். அந்த குழுமத்தில் ஏற்பட்ட சில சிக்கல்களால் சைரஸ் மிஸ்திரிக்கு சிக்கல் உருவானதாக கூறப்பட்டது. தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் 19-ம் தேதி டாடா குழுமத்தின் அனைத்து நிறுவனங்களின் பொறுப்பில் இருந்தும் ராஜினாமா செய்வதாக சைரஸ் மிஸ்திரி அறிவித்தார்.

சைரஸ் மிஸ்திரி நீக்கத்தைத் தொடர்ந்து ரத்தன் டாடா, டாடா சன்ஸ் நிறுவனத்தின் இடைக்கால தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய தலைவரை தேர்வுக் குழு முடிவு செய்யும் வரை ரத்தன் டாடா இடைக்கால தலைவராக நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் டாடா குழுமங்களின் புதிய நிறுவனத் தலைவராக தமிழகத்தை சேர்ந்த என்.சந்திரசேகரன் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள டாடா சன்ஸ், ‘‘அவர் அடுத்த மாதம் 21-ந்தேதியில் இருந்து தனது பொறுப்பை ஏற்றுக்கொள்வார்’’ என்று கூறியுள்ளது.

2009-ம் ஆண்டிலிருந்து டாடா கன்சல்டன்சி சர்வீஸ் தலைவராக பதவி வகித்து வரும் சந்திரசேகரன் நாமக்கல் மாவட்டத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News