செய்திகள்

அத்வானி பிரதமர் ஆவதற்கு ஜனாதிபதி உதவ வேண்டும்: மம்தா பானர்ஜி

Published On 2017-01-06 16:15 GMT   |   Update On 2017-01-06 16:15 GMT
அத்வானி பிரதமர் ஆவதற்கு ஜனாதிபதி உதவ வேண்டும் என்று மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொல்கத்தா

மத்திய அரசு மேற்கொண்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கையை மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடுமையாக எதிர்த்து வருகிறார். இந்த நிலையில், சிட்பண்ட் மோசடியில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பிக்கள் இருவர் கைது ஆனதையடுத்து மத்திய அரசின் மீதான தனது எதிர்ப்பு நிலைப்பாட்டை மேலும் வலுவாக்கினார். இப்போது பிரதமர் மோடியை அனுப்பிவிட்டு வேறு ஒருவர் தலைமையில் தேசிய அரசு அமைக்க வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளார். இதுபற்றி மம்தா பானர்ஜி நிருபர்களிடம் கூறியதாவது:–

பிரதமர் மோடி தலைமையில் அனைத்து நிறுவனங்களும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. திட்டக் கமி‌ஷனை கூட அவர்கள் கலைத்துவிட்டார்கள். இது மிகவும் ஆபத்தான விளையாட்டு. பிரதமர் மோடி காளிதாஸ் போல நடந்து கொள்கிறார்... அதாவது அவர் உட்கார்ந்து இருக்கும் மரக்கிளையையே வெட்ட முயற்சிக்கிறார். இப்போதுள்ள சூழ்நிலையில் வேறொரு பா.ஜனதா தலைவர் தலைமையில் தேசிய அரசு அமைக்கப்பட வேண்டும். பிரதமர் மோடிக்கு விடை கொடுத்து அனுப்புங்கள்.

அத்வானி, ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி போன்ற யாராவது ஒருவர் தலைமை தாங்கட்டும். இப்போதுள்ள சூழ்நிலை ஏற்றுக்கொள்ள முடியாதது. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய அரசு அமைப்பது குறித்த கருத்தை வலியுறுத்த வேண்டும். நமது அரசியல் வேற்றுமைகளை ஒதுக்கி வைப்போம். குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்கி தேசிய அரசை அமைப்போம்.

மத்தியில் ஜனாதிபதி ஆட்சி அமைவதற்கான சரியான நேரம் இது தான். குழப்பத்தில் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று ஜனாதிபதிக்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்.

இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

Similar News