செய்திகள்

ரூபாய் நோட்டு மாற்றம்: இந்திய வரலாற்றில் மிகப்பெரிய ஊழல் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Published On 2016-12-09 09:50 GMT   |   Update On 2016-12-09 09:50 GMT
உயர் மதிப்பிலான 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது இந்திய வரலாற்றில் மிகப்பெரிய ஊழல் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி:

உயர் மதிப்பிலான 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 8-ந்தேதி அறிவித்தார்.

அன்றில் இருந்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி மிகவும் கடுமையாக பிரதமர் மோடியை விமர்சித்து வருகிறார்.

ஒரு மாதம் ஆனதையொட்டி கையில் கறுப்பு பேண்ட் அணிந்து நேற்று கறுப்பு தினத்தை நினைவுப் படுத்தினார். பிரதமரின் இந்த முடிவு முட்டாள்தனமானது என்றும் சாடினார்.

இந்த நிலையில் ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்தது இந்திய வரலாற்றில் மிகப்பெரிய ஊழல் என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக பாராளுமன்றத்துக்கு வெளியே அவர் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உயர்மதிப்பலான ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது இந்திய வரலாற்றில் மிகப்பெரிய ஊழலாகும். இந்த ஊழலை நான் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்துவேன். ஆனால் மத்திய அரசோ என்னை பாராளுமன்றத்தில் பேச அனுமதிக்க மறுக்கிறது. விவாதம் செய்யாமல் மத்திய அரசு பயந்து ஓடுகிறது.

பாராளுமன்றத்தில் என்னை பேச அனுமதித்தால் நிச்சயம் பூகம்பம் ஏற்படும்.

இவ்வாறு ராகுல்காந்தி கூறியுள்ளார்.

Similar News