செய்திகள்

ரூபாய் நோட்டு செல்லாது முடிவு முட்டாள்தனமானது: மோடி மீது ராகுல் பாய்ச்சல்

Published On 2016-12-08 07:47 GMT   |   Update On 2016-12-08 07:47 GMT
500, 1000 ரூபாய் நோட்டு விவகாரத்தில் பிரதமர் மோடி முடிவு முட்டாள்தனம். இதனால் நாட்டை பேரழிவுக்கு கொண்டு சென்றுவிட்டார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
புதுடெல்லி:

பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர். போராட்டத்துக்கு முன்பு ராகுல் காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

உயர் மதிப்பிலான 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது தைரியமானது என்று பிரதமர் தெரிவித்து இருக்கிறார். இந்த முடிவு முட்டாள்தனம். இதனால் நாட்டை பேரழிவுக்கு கொண்டு சென்றுவிட்டார்.

ரூபாய் நோட்டு விவகாரத்தில் ஏழைகள், விவசாயிகள், தினக்கூலிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். பிரதமர் யாரையும் கலந்து ஆலோசிக்காமல் இந்த முடிவை அறிவித்துள்ளார். விவசாயிகள் செத்து மடிந்து கொண்டிருக்கும் போது பிரதமர் வேடிக்கை விளையாட்டை பார்த்துக் கொண்டு இருக்கிறார்.

பிரதமர் பாராளுமன்றத்துக்கு வர வேண்டும். வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்திற்கு அனுமதிக்க வேண்டும். நாங்கள் அவரை ஓடவிடமாட்டோம்.

பாராளுமன்றம் செயல்படாமல் போவதற்கு மத்திய அரசுதான் காரணம். எதிர்க்கட்சிகள் கோரிக்கையை மத்திய அரசு நிராகரிக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News