செய்திகள்

மம்தா விமானத்தில் குறைந்த எரிபொருள்: 6 விமானிகள் சஸ்பெண்ட்

Published On 2016-12-07 07:30 GMT   |   Update On 2016-12-07 11:43 GMT
மம்தா பானர்ஜி பயணம் செய்த விமானத்தை குறைந்த அளவு எரிபொருளுடன் இயக்கியது தொடர்பாக 2 பைலட்டுகளும், இதே காரணத்திற்காக மேலும் இரண்டு விமானங்களின் 4 பைலட்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி:

மேற்கு வங்காள முதல்- மந்திரி மம்தா பானர்ஜி கடந்த 30-ந்தேதி பாட்னா சென்றார். அங்கிருந்து அன்று இரவு இண்டிகோ விமானம் மூலம் அவர் கொல்கத்தா சென்றார். மம்தா பானர்ஜி சென்ற விமானம் கொல்கத்தா விமான நிலையத்தில் குறிப்பிட்ட நேரத்தில் தரை இறங்காமல் 30 நிமிடம் நேரம் தாமதமாக சென்றது. அதுவும், குறைந்த எரிபொருளுடன் வானத்தில் சிறிது நேரம் வட்டமடித்து அதன்பிறகே தரையிறங்கியுள்ளது.

எரிபொருள் குறைவாக இருந்தும் தரையிறங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்று மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.

மேலும், இது தொடர்பாக பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரச்சினையை கிளப்பினார்கள். விமானத்தில் எரிபொருள் குறைந்துவருவதை விமானி சுட்டிக்காட்டியும், அரை மணி நேரம் வரை விமான நிலையத்திற்கு மேலே வட்டமடிக்க விட்டதாகவும், இதன்மூலம் மம்தாவை கொல்ல சதி நடப்பதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.

மம்தா பயணம் செய்த விமானம் வட்டமடித்த அதேசமயத்தில் மேலும் 2 விமானங்கள் அப்பகுதியில் குறைந்த எரிபொருளுடன் கொல்கத்தா வான் பகுதியில் சுற்றியது. இதைத் தொடர்ந்து விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரணைக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில் வான்பகுதியில் சுற்றும்போது குறைந்த அளவு எரிபொருளுடன் விமானத்தினை இயக்கியது தொடர்பாக 6 விமானிகளை விமான போக்குவரத்து இயக்குனரகம் ‘சஸ்பெண்ட்’ செய்துள்ளது. இன்டிகோ, ஸ்பைஸ் ஜெட், ஏர் இந்தியா ஆகிய விமானங்களை சேர்ந்த 6 விமானிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.

Similar News